Published : 18 Jul 2025 06:23 PM
Last Updated : 18 Jul 2025 06:23 PM
புதுடெல்லி: அலகாபாத் உயர் நீதிமன்ற நீதிபதி யஷ்வந்த் வர்மாவை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தும் தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டிருப்பது எம்பிக்கள்தான் என்றும், அதற்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை என்றும் மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் தெரிவித்துள்ளார்.
டெல்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக பணியாற்றிய யஷ்வந்த் வர்மா வீட்டில் கடந்த மார்ச் 14-ம் தேதி தீ விபத்து ஏற்பட்டது. தகவல் அறிந்து சம்பவ இடத்துக்குச் சென்ற தீயணைப்புப் படை வீரர்கள் தீயை அணைத்தனர். அப்போது வீட்டின் ஓர் அறையில் பாதி எரிந்த நிலையில் இருந்த ரூபாய் நோட்டு மூட்டைகள் கண்டெடுக்கப்பட்டன. இது குறித்து உச்ச நீதிமன்றத்தின் அப்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னாவிடம் தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனிடையே, வர்மா அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டார்.
பின்னர், தலைமை நீதிபதி நியமித்த குழு தீவிர விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பித்தது. இதன் அடிப்படையில் பதவி விலகுமாறு நீதிபதி யஷ்வந்த் வர்மாவிடம் தலைமை நீதிபதி அறிவுறுத்தினார். ஆனால் அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார். இதைத் தொடர்ந்து வர்மாவை பதவி நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்குமாறு குடியரசுத் தலைவருக்கும் பிரதமருக்கும் தலைமை நீதிபதி கடிதம் அனுப்பினார்.
இந்தச் சூழ்நிலையில் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடர் வரும் 21-ம் தேதி தொடங்குகிறது. இதில் நீதிபதி யஷ்வந்த் வர்மாவுக்கு எதிராக பதவி நீக்க தீர்மானம் கொண்டு வர உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக பேட்டி அளித்துள்ள மத்திய சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால், "இந்திய தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா அமைத்த விசாரணைக் குழு தனது விசாரணை அறிக்கையை ஏற்கெனவே வழங்கி உள்ளது. அந்த அறிக்கையுடன் உடன்படவில்லை என்றால், அதற்காக நீதிபதி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தையோ அல்லது உயர் நீதிமன்றத்தையோ அணுகினால் அது அவரது தனிப்பட்ட விஷயம்.
உச்ச நீதிமன்ற அல்லது உயர் நீதிமன்ற நீதிபதி ஒருவரை பதவி நீக்கம் செய்ய நாடாளுமன்றத்துக்கு உரிமை உள்ளது. ஒரு நீதிபதியை பதவி நீக்கம் செய்ய மக்களவையில் குறைந்தது 100 உறுப்பினர்களின் ஆதரவும், மாநிலங்களவையில் குறைந்தது 50 உறுப்பினர்களின் ஆதரவும் தேவை. இது முழுக்க முழுக்க எம்.பி.க்களின் விஷயம். அவர்களால் சில முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கும் அரசுக்கும் தொடர்பு இல்லை" என தெரிவித்துள்ளார்.
இதனிடையே, விசாரணைக் குழு அறிக்கை செல்லத்தக்கது அல்ல என தீர்ப்பு வழங்கக் கோரி யஷ்வந்த் வர்மா உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்துள்ளார். மேலும், தன்னை பதவியில் இருந்து நீக்க அப்போதைய தலைமை நீதிபதி கன்னா அளித்த பரிந்துரையை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர் கோரி உள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT