Published : 18 Jul 2025 11:07 AM
Last Updated : 18 Jul 2025 11:07 AM
பெங்களூரு: கர்நாடக முதல்வர் சித்தராமையா குறித்து பேஸ்புக்கில் மெட்டா வெளியிட்ட தானியங்கி மொழிபெயர்ப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது.
பழம்பெரும் நடிகை சரோஜா தேவி அண்மையில் பெங்களூருவில் காலமானார். அவரது உடலுக்கு திரையுலக பிரபலங்கள், அரசியல் கட்சி தலைவர்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர். கர்நாடக முதல்வர் சித்தராமையாவும் சரோஜா தேவியின் இல்லத்துக்கு நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இது தொடர்பான பதிவை முதலமைச்சர் அலுவலகத்தின் அதிகாரபூர்வ பேஸ்புக் பக்கம் வெளியிட்டிருந்தது. அதில் மறைந்த நடிகை சரோஜா தேவியின் உடலுக்கு முதல்வர் சித்தராமையா அஞ்சலி செலுத்தினார்’ என்று கன்னடத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் அந்த பதிவை தானியங்கி வசதி மூலம் மொழிபெயர்த்த மெட்டா, ‘கர்நாடக முதல்வர் சித்தராமையா நேற்று காலமானார்’ என்று ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தது. இது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இது குறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ள முதல்வர் சித்தராமையா. “மெட்டா தளங்களில் பதிவிடப்படும் கன்னட உள்ளடக்கத்தின் தவறான தானியங்கி மொழிபெயர்ப்பு உண்மைகளைத் திரித்து பயனர்களை தவறாக வழிநடத்துகிறது. அதிகாரபூர்வ தகவல்தொடர்புகள் என்று வரும்போது இது மிகவும் ஆபத்தானது. எனது ஊடக ஆலோசகர் கே.வி.பிரபாகர், உடனடியாக திருத்தம் செய்ய வலியுறுத்தி மெட்டாவிற்கு கடிதம் எழுதியுள்ளார்.
சமூக ஊடக தளங்கள் பொறுப்புடன் செயல்பட வேண்டும். அவற்றில் காட்டப்படும் மொழிபெயர்ப்புகள் பெரும்பாலும் தவறானவை என்பதை குடிமக்கள் அறிந்திருக்க வேண்டும் என்று நான் எச்சரிக்கிறேன். தொழில்நுட்ப நிறுவனங்களின் இத்தகைய அலட்சியம் பொதுமக்களின் புரிதலுக்கும் நம்பிக்கைக்கும் தீங்கு விளைவிக்கும்” என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து சம்பந்தப்பட்ட பதிவின் மொழிபெயர்ப்பை மெட்டா நிறுவனம் சரிசெய்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT