Last Updated : 18 Jul, 2025 10:41 AM

 

Published : 18 Jul 2025 10:41 AM
Last Updated : 18 Jul 2025 10:41 AM

டெல்லியில் இன்றும் பள்ளிகளுக்கு வெடிகுண்டு மிரட்டல்: பெற்றோர்கள், மாணவர்கள் அச்சம்

டெல்லியில் உள்ள 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளுக்கு இன்று (ஜூலை 18) மின்னஞ்சல் மூலமாக வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதால் பரபரப்பான சூழல் நிலவுகிறது.

டெல்லியில் உள்ள 23 பள்ளிகளுக்கு இன்று வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. அந்த மிரட்டல் மின்னஞ்சலில், “வணக்கம். பள்ளி வகுப்பறைகளுக்குள் பல வெடிபொருட்கள் வைத்துள்ளேன் என்பதை உங்களுக்குத் தெரிவிக்கவே நான் எழுதுகிறேன். வெடிபொருட்கள் கருப்பு பிளாஸ்டிக் பைகளில் மறைத்து வைக்கப்பட்டுள்ளன. உங்கள் அனைவரையும் இந்த உலகத்திலிருந்து அழித்துவிடுவேன். ஒரு ஆன்மா கூட உயிர் பிழைக்காது. பெற்றோர்கள் பள்ளிக்கு வந்து அவர்களின் குழந்தைகளுடைய உடல்களை கண்ணீர்விட்டு, எடுத்துச்செல்லும் செய்திகளைப் பார்த்து நான் மகிழ்ச்சியுடன் சிரிப்பேன்’ எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

டெல்லி காவல்துறை வெளியிட்ட தகவல்களின்படி, ரிச்மண்ட் குளோபல் பள்ளிக்கு வந்த மிரட்டல் மின்னஞ்சலில், "நீங்கள் அனைவரும் துன்பப்படுவதற்குத் தகுதியானவர்கள். நான் உண்மையிலேயே என் வாழ்க்கையை வெறுக்கிறேன். இந்த செய்தியை பார்த்த பிறகுஎன் தொண்டையை அறுத்து, என் மணிக்கட்டை அறுத்து நான் தற்கொலை செய்து கொள்வேன். எனக்கு ஒருபோதும் உண்மையிலேயே உதவி கிடைக்கவில்லை, மனநல மருத்துவர்கள், உளவியலாளர்கள், யாரும் இதுவரை என்மீது அக்கறை கொள்ளவில்லை, யாரும் எனக்காக கவலைப்பட மாட்டார்கள். மனநல மருந்துகள் உதவும் என்று மக்களை மூளைச் சலவை செய்கிறீர்கள். ஆனால் அவை உதவுவதில்லை, இதற்கு நான் வாழும் சாட்சி. எனவே என்னைப் போலவே நீங்களும் துன்பப்படுவதற்குத் தகுதியானவர்கள் ”என்று தெரிவித்துள்ளது.

சிவில் லைன்ஸில் உள்ள செயிண்ட் சேவியர் பள்ளி, பஸ்சிம் விஹாரில் உள்ள ரிச்மண்ட் குளோபல் பள்ளி, ரோஹினியில் உள்ள அபினவ் பப்ளிக் பள்ளி மற்றும் ரோஹினியில் உள்ள தி சவரன் பள்ளி உள்ளிட்ட பள்ளிகளுக்கு இந்த மிரட்டல் மின்னஞ்சல் வந்துள்ளது. மிரட்டல் பெறப்பட்ட 23 பள்ளிகளில் காவல்துறை, தீயணைப்புத் துறை மற்றும் வெடிகுண்டு செயலிழப்பு துறை ஆகியவை தேடுதல் பணிகளில் இறங்கியுள்ளன.

இந்த வார தொடக்கத்தில் திங்கள் முதல் புதன் கிழமை வரை டெல்லியில் உள்ள 10 பள்ளிகள் மற்றும் செயிண்ட் ஸ்டீபன் கல்லூரிக்கு இதே போன்ற வெடிகுண்டு மிரட்டல் மின்னஞ்சல் அனுப்பப்பட்டது. அந்தப் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டு சோதனைகள் நடத்தப்பட்டதில், அந்த மிரட்டல்கள் புரளி என்பது தெரியவந்தது. டெல்லியில் பள்ளிகளுக்கு விடுக்கப்படும் தொடர் வெடிகுண்டு மிரட்டல்களால் மாணவர்கள் அச்சமடைந்துள்ளனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x