Published : 18 Jul 2025 07:35 AM
Last Updated : 18 Jul 2025 07:35 AM
பாட்னா: பிஹார் மாநிலத்தின் பக்ஸர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் சந்தன் மிஸ்ரா. இவர் மீது பல கொலை வழக்குகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட குற்ற வழக்குகள் உள்ளன. இவர் சமீபத்தில் பக்ஸர் சிறையிலிருந்து பகல்பூர் சிறைக்கு மாற்றப்பட்டார்.
இவர் சிகிச்சைக்காக பரோலில் வெளிவந்து பாட்னா நகரில் உள்ள பரஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இதையறிந்த இவரது எதிரணியைச் சேர்ந்த கும்பல், மருத்துவமனையிலேயே இவரை சுட்டுக் கொல்ல திட்டமிட்டது.
இந்நிலையில் பரஸ் மருத்துவமனையில் நேற்று காலை 5 பேர் நுழைந்தனர். சந்தன் மிஸ்ரா சிகிச்சை பெறும் அறையை நெருங்கியதும், 5 பேரும் சட்டைக்குள் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கியை எடுத்தனர். சந்தன் மிஸ்ரா சிகிச்சை பெறும் அறையில் புகுந்து அவரை பல இடங்களில் சுட்டுவிட்டு தப்பிச் சென்றனர். இதில் சந்தன் மிஸ்ரா இறந்தார். கொலையாளிகள் நுழையும் வீடியோ வைரலாக பரவியது.
இந்த கும்பல், சந்தன் மிஸ்ஸாவுக்கு எதிராக செயல்படும் சந்தன் செரு தலைமையிலான ரவுடிகள் என போலீஸார் அடையாளம் கண்டு ஒருவரை கைது செய்தனர். மற்றவர்களை பிடிக்கும் முயற்சியில் போலீஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இதுகுறித்து ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவர் தேஜஸ்வி யாதவ் அளித்த பேட்டியில், ‘பிஹாரில் யாருக்கும், எங்கும் பாதுகாப்பு இல்லை. அரசு ஆதரவுடன் செயல்படும் குற்றவாளிகள், மருத்துவமனையின் ஐசியு வார்டுக்குள் புகுந்து சிகிச்சை பெற்ற நபரை சுட்டுக் கொன்றுள்ளனர். 2005-ம் ஆண்டுக்கு முன்பு இது போன்ற சம்பவங்கள் பிஹாரில் நடைபெறவில்லை” என்றார்.
பிஹார் துணை முதல்வர் விஜய் சின்ஹா அளித்த பேட்டியில், ‘‘இச்சம்பவம் துரதிருஷ்டமானது. இது குறித்து விசாரணை நடத்தப்படும். குற்றவாளிகள் தப்ப முடியாது. அவர்களுக்கு கடுமையான தண்டனை வழங்கப்படும் என முதல்வர் நிதிஷ் குமார் கூறியுள்ளார்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT