Published : 18 Jul 2025 06:11 AM
Last Updated : 18 Jul 2025 06:11 AM
புதுடெல்லி: “இந்தியாவின் அடுத்த விண்வெளி வீரர், உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட விண்கலத்தில் பயணம் செய்வார்” என விண்வெளித்துறை அமைச்சர் ஜிதேந்திர சிங் கூறியுள்ளார்.
அவர் பிடிஐ நிறுவனத்துக்கு அளித்த பிரத்யேக பேட்டியில் கூறியதாவது: இந்திய விண்வெளி வீரர் ஷுபான்ஷு சுக்லா, ஆக்ஸியாம்-4 திட்டத்தின் கீழ் சர்வதேச விண்வெளி மையத்தில் 3 வார காலம் தங்கி ஆய்வுப் பணிகளில் ஈடுபட்டு பூமி திரும்பியுள்ளார். அமெரிக்க வீராங்கனை பெக்கி விட்சன் டிராகன் விண்கலத்தின் கமாண்டர். ஷுபான்ஷு சுக்லா பைலட்டாக சென்றுள்ளார். சர்வதேச விண்வெளி மையத்தில் அவர் மேற்கொண்ட ஆய்வு முக்கியமானது.
அவரது பயணத்துக்காக ஆக்ஸியாம் ஸ்பேஸ் நிறுவனத்துக்கு இஸ்ரோ நிறுவனம் ரூ.550 கோடி வழங்கியது. அவர் விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்தை நாம் மேற்கொள்வதால், சர்வதேச விண்வெளி மையத்தை கையாள்வதில் அவர் பெற்ற அனுபவம் மிக முக்கியமானது. இது இந்தியாவின் எதிர்கால, விண்வெளி பயணங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். விண்வெளி ஆய்வில் சர்வதேச நாடுகளுடன் இணைந்து செயல்படவும் வழிவகுக்கும்.
ககன்யான் விண்கலத்தில் 2 விண்வெளி வீரர்களை இஸ்ரோ 2027-ம் ஆண்டு அனுப்ப உள்ளது. இவர்கள் பூமியின் கீழடுக்கு சுற்றுவட்ட பாதையில் பயணம் செய்துவிட்டு பூமி திரும்புவர். இதில் உள்நாட்டில் தயாரிக்கப்படும் விண்கலம் பயன்படுத்தப்படும். இந்திய விண்வெளி வீரர்கள், முதல் முறையாக இந்திய விண்கலத்தில் பயணம் செய்யவுள்ளனர். இதன் மூலம் விண்வெளிக்கு, வீரர்களை அனுப்பும் ஒரு சில நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இடம் பெறும். இத்திட்டம், எதிர்காலத்தில் சொந்த விண்வெளி மையம் அமைக்கும் முயற்சிக்கும் வழிவகுக்கும்.
நாம் நமது சொந்த விண்வெளி மையத்தை உருவாக்க திட்டமிட்டுள்ளோம். இது 2035-ம் ஆண்டில் சாத்தியமாக வாய்ப்புள்ளது. இதற்கு பாரத் விண்வெளி மையம் (பிஎஸ்எஸ்) என பெயர் வைக்க திட்டமிடப்பட்டுள்ளது. நிலவின் தென்துருவ பகுதியில் சந்திரயான்-3 விண்கலத்தை இஸ்ரோ தரையிறக்கியதன் மூலம், விண்வெளி ஆய்வில் முன்னணியில் உள்ள நாடுகளின் வரிசையில் இந்தியா இடம் பிடித்தது. தற்போது ஷுபான்ஷு சுக்லா சர்வதேச விண்வெளி மையம் சென்று ஆய்வு பணிகளை முடித்துவிட்டு திரும்பியுள்ளார். இதன் மூலம் விண்வெளித்துறையில் எத்தகைய சவால்களையும் சந்திக்க இந்தியா தயார் நிலையில் உள்ளது என்ற தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
விண்வெளித்துறையை தனியார் துறைக்கு திறந்துவிட மத்திய அரசு முடிவு செய்தது, இந்திய விண்வெளி பொருளாதாரத்துக்கு ஊக்குவிப்பை அளித்துள்ளது. இந்தியாவின் விண்வெளி பொருளாதாரம் தற்போதுள்ள 8.4 பில்லியன் அமெரிக்க டாலர் என்ற நிலையில் இருந்து 2033-ம் ஆண்டில் 44 பில்லியன் அமெரிக்க டாலராக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT