Published : 17 Jul 2025 07:27 AM
Last Updated : 17 Jul 2025 07:27 AM
அமராவதி: ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த புசபாட்டி அசோக் கஜபதி ராஜு தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்தவராவார். விஜயநகரத்தின் கடைசி அரசரான புசபாட்டி விஜயராம கஜபதி ராஜுவின் மகன் அசோக் கஜபதி ராஜு. விஜயராம கஜபதி ராஜுவும், இவரது சகோதரர் ஆனந்த கஜபதி ராஜுவும் நாடாளுமன்ற உறுப்பினர்களாகவும் பதவி வகித்துள்ளனர்.
அரச பரம்பரையை சேர்ந்த அசோக் கஜபதி ராஜு சென்னையில் பிறந்தவர். முதலில் இவர் 1978-ல் ஜனதா கட்சி வேட்பாளராக விஜயநகரம் சட்டப்பேரவைத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
அதன் பின்னர் இவர் தெலுங்கு தேசம் கட்சியில் இணைந்து 1983, 1985, 1989, 1994, 1999 மற்றும் 2009-ம் ஆண்டு வரை தொடர்ந்து சட்டப்பேரவை உறுப்பினராக வெற்றி பெற்றார். அதன் பின்னர் இவர், 2014-ம் ஆண்டு விஜயநகரம் நாடாளுமன்ற தொகுதியில் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றி பெற்றார்.
அப்போது அவர் மத்திய விமான போக்குவரத்து அமைச்சராக பதவி வகித்தார். இதற்கு முன்பு, ஆந்திர மாநில கலால், வணிகவரி, நிதி, வருவாய்த்துறைகளுக்கான அமைச்சராகவும் பதவி வகித்துள்ளார். சிம்மாசலம் நரசிம்மர் கோயிலின் நிரந்தர தர்மகர்த்தாவான இவர், பல்வேறு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளையும் நடத்தி வருகிறார். அரச பரம்பரையை சேர்ந்த அசோக் கஜபதி ராஜுவை தற்போது கோவா மாநில ஆளுநராக நியமிப்பதாக குடியரசு தலைவர் அறிவித்துள்ளார்.
இதுகுறித்து விஜயநகரத்தில் அசோக் கஜபதி ராஜு கூறியதாவது கூறியதாவது: வாய்ப்பு வந்தால், வந்த வாய்ப்பை பொறுப்புடன் செய்து முடிப்பதையே நான் விரும்புவேன். முதல்வர் சந்திரபாபு நாயுடு என் மீது நம்பிக்கை வைத்து செய்த சிபாரிசின் பேரில்தான் எனக்கு கோவா மாநில ஆளுநர் எனும் பெருமை கிடைக்கிறது.
இதற்காக நான் அவருக்கு நன்றிக்கடன் பட்டுள்ளேன். கோவா என்றால் எனக்கு எனது நண்பரும், மறைந்த முன்னாள் முதல்வருமான மனோகர் பாரிக்கர் நினைவுக்கு வருகிறார். நாட்டுக்கு சேவை செய்யும் பாக்கியம் எனக்கு மீண்டும் கிடைத்துள்ளதை நினைத்து மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். இவ்வாறு அசோக் கஜபதி ராஜு கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT