Published : 17 Jul 2025 07:05 AM
Last Updated : 17 Jul 2025 07:05 AM
சிம்லா: இமாச்சல பிரதேசத்தின் சிர்மவுர் மாவட்டத்தில் பத்ரிபூர், கிஷன்புரா, சந்தோக்கர், புருவாலா ஆகிய சிறு நகரங்களை இணைக்கும் சாலை உள்ளது. இந்த சாலையின் நடுவில் மின் கம்பங்கள் இருக்கும் ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. அந்த வீடியோவை பதிவிட்ட நபர், “இப்படி ஒரு சாலையை உருவாக்கியதற்காக என் நாட்டைப் பற்றி நான் பெருமைப்படுகிறேன், இதை பார்ப்பதற்காகவே நான் ஹரியானாவில் இருந்து வந்துள்ளேன். இது இமாச்சலின் சுற்றுலாவை அதிகரிக்க உதவுகிறது.
பொருளாதாரம் இப்படித்தான் வளர்கிறது’’ என்று கிண்டல் செய்துள்ளார். இதுகுறித்து மாநில மின் துறை முன்னாள் அமைச்சரும் பாஜக எம்எல்ஏவுமான சுக்ராம் சவுத்ரி கூறுகையில், “இந்த மின் கம்பங்கள் 25 ஆண்டுகள் பழமையானவை. இவை சாலைக்கு வெளியில் தான் இருந்தன. ஆனால் சாலையை விரிவாக்க திட்டமிட்டபோது, மின் கம்பங்களை அகற்றுவது குறித்து யாரும் பரிசீலிக்கவில்லை. இவற்றை இடம்மாற்ற நான் கோரிக்கை விடுத்துள்ளேன். எனினும் இதை செயல்படுத்த நிதி இல்லை என்று அதிகாரிகள் கூறுகின்றனர்’’ என்றார்.
இதற்கு முன் பிஹாரில் ஒரு சாலையின் நடுவில் மரங்கள் இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலானது பிஹாரின் ஜெகனாபாத் மாவட்ட நிர்வாகம் ரூ.100 கோடியில் சாலையை விரிவாக்கம் செய்தபோது, மரங்களை அகற்ற வனத்துறையிடம் அனுமதி கேட்டது. ஆனால் இந்த கோரிக்கையை வனத்துறை ஏற்காததால் மாவட்ட நிர்வாகம் மரங்களை சுற்றி சாலையை உருவாக்கி விட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT