Published : 16 Jul 2025 06:00 PM
Last Updated : 16 Jul 2025 06:00 PM
புதுடெல்லி: ஜம்மு காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கும் சட்டத்தை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் கொண்டு வர வலியுறுத்தி பிரதமர் நரேந்திர மோடிக்கு, ராகுல் காந்தியும், மல்லிகார்ஜுன கார்கேவும் கடிதம் எழுதியுள்ளனர்.
இது தொடர்பாக மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தியும், மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் மல்லிகார்ஜுன் கார்கேவும் இணைந்து பிரதமர் நரேந்திர மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில், "ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்க வேண்டும் என்று அம்மாநில மக்கள் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார்கள். அவர்களின் இந்த கோரிக்கை சட்டப்பூர்வமானது. அதோடு, இது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக உரிமைகள் மீதான அவர்களின் உறுதியைக் காட்டுகிறது.
கடந்த காலங்களில் யூனியன் பிரதேசங்களுக்கு மாநில அந்தஸ்து வழங்கப்பட்டது. ஆனால், முன் எப்போதும் இல்லாத வகையில் மாநிலமாக இருந்த ஜம்மு காஷ்மீர், யூனியன் பிரதேசமாக தரமிறக்கப்பட்டது. ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என்ற அரசாங்கத்தின் நிலைப்பாட்டை நீங்கள் பலமுறை உறுதிப்படுத்தி இருக்கிறீர்கள்.
கடந்த மே 19, 2024ல் பவனேஸ்வரில் நீங்கள் அளித்த பேட்டியில், மாநில அந்தஸ்து மீண்டும் வழங்கப்படும் என்பது நாங்கள் அளித்த வாக்குறுதி. நாங்கள் அதை நிச்சயம் நிறைவேற்றுவோம் என கூறி இருந்தீர்கள். அதோடு, செப்டம்பர் 19, 2024-ல் ஸ்ரீநகரில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய நீங்கள், ஜம்மு காஷ்மீருக்கு மீண்டும் மாநில அந்தஸ்து வழங்கப்படும் என நாடாளுமன்றத்தில் நாங்கள் உறுதி அளித்திருக்கிறோம் என குறிப்பிட்டீர்கள். உச்ச நீதிமன்றத்திலும் மத்திய அரசு இத்தகைய உறுதிமொழியை அளித்துள்ளது.
எனவே, இவற்றைக் கருத்தில் கொண்டு ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்துக்கு முழு மாநில அந்தஸ்து வழங்குவதற்கான ஒரு சட்டத்தை வரவிருக்கும் நாடாளுமன்ற மழைக்காலக் கூட்டத் தொடரில் கொண்டு வர நாங்கள் அரசாங்கத்தை வலியுறுத்துகிறோம்.
மேலும், லடாக் யூனியன் பிரதேசத்தை அரசியலமைப்பின் ஆறாவது அட்டவணையின் கீழ் சேர்க்க அரசாங்கம் சட்டம் இயற்ற நாங்கள் வலியுறுத்துகிறோம். இது லடாக் மக்களின் கலாச்சாரம், முன்னேற்றம், அரசியல் சார்ந்த விருப்பங்களை பூர்த்தி செய்வதற்கும், அவர்களின் உரிமைகள், நிலம் மற்றும் அடையாளத்தைப் பாதுகாப்பதற்குமான முக்கிய நடவடிக்கையாக இருக்கும்" என தெரிவித்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT