Published : 16 Jul 2025 08:45 AM
Last Updated : 16 Jul 2025 08:45 AM
பாட்னா: பிஹாரில் நடைபெற்று வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் (எஸ்ஐஆர்) நடவடிக்கையின் விளைவாக 35 லட்சத்துக்கும் மேற்பட்டவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து தேர்தல் ஆணையம் நீக்க உள்ளது.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் கூறியுள்ளதாவது: பிஹார் மாநிலத்தில் எஸ்ஐஆர் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதுவரை 6.6 கோடி வாக்காளர்கள் தங்களது கணக்கெடுப்பு படிவங்களை சமர்ப்பித்துள்ளனர்.
இது, மாநிலத்தில் உள்ள மொத்த வாக்காளர் எண்ணிக்கையில் 88.18 சதவீதம் ஆகும். ஜூலை 25 வரை வாக்காளர்கள் தங்கள் படிவங்களை சமர்ப்பிக்க காலஅவகாசம் உள்ளது. அதன் பிறகு வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.
1.59 சதவீதம் அதாவது 12.5 லட்சம் வாக்காளர்கள் இறந்துவிட்டனர். இருப்பினும், அவர்களது பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. மேலும், 2.2 சதவீதம் அதாவது 17.5 லட்சம் வாக்காளர்கள் பிஹாரில் இருந்து நிரந்தரமாக வெளியேறிவிட்டனர். எனவே, அவர்கள் இனி பிஹார் மாநில தேர்தல்களில் வாக்களிக்க தகுதியற்றவர்களாகி விடுகின்றனர். மேலும், 0.73 சதவீதம் அதாவது சுமார் 5.5 லட்சம் பேரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இரண்டு முறை பதிவு செய்யப்பட்டிருப்பது கண்டறியப்பட்டுள்ளது.
இவை அனைத்தையும் கணக்கிடும்பட்சத்தில் பிஹார் வாக்காளர் பட்டியலில் இருந்து சுமார் 35.5 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கப்படும். இது, மொத்த வாக்காளர்களில் 4.5 சதவீதத்துக்கும் அதிகமாகும்.இவ்வாறு தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இந்த எஸ்ஐஆர் கள ஆய்வின்போது நேபாளம், வங்கதேசம், மியான்மர் போன்ற நாடுகளைச் சேர்ந்த சில வெளிநாட்டினரும் பிஹார் வாக்காளர்களாக பதிவு செய்திருப்பதை தேர்தல் ஆணையம் வெளிப்படுத்தியுள்ளது. சரிபார்ப்புகளுக்கு பிறகு இந்த பெயர்களும் நீக்கப்படும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனிடையே, பிஹார் மாநிலத்தில் வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தம் மேற்கொள்ளும் தேர்தல் ஆணையத்தின் நடவடிக்கையை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு ஜூலை 28-ம் தேதி விசாரணைக்கு வரவுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT