Published : 16 Jul 2025 08:15 AM
Last Updated : 16 Jul 2025 08:15 AM
புதுடெல்லி: தெரு நாய்களுக்கு உணவளிக்கும் விவகாரம் தொடர்பாக டெல்லியைச் சேர்ந்த ஒருவர் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். அந்த மனுவில் அவர் கூறும்போது, “தெருநாய்களுக்கு உணவளிப்பதற்காக தனியான இடங்களைத் தேர்வு செய்து அமல்படுத்த வேண்டும்.
கண்ட இடங்களில் தெருநாய்களுக்கு உணவு வழங்கக்கூடாது. இதுதொடர்பான வழக்கில் அலகாபாத் உயர் நீதிமன்றம் வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளது. தெரு நாய்களுக்கு உணவு அளிப்பதில் நாங்கள் விதிகளை பின்பற்றுகிறோம். டெல்லி கிரேட்டர் நொய்டாவில் தெருநாய்களுக்கு வழங்க இதுபோன்ற உணவு மையங்கள் உருவாக்கப்பட்டாலும், நொய்டா அதிகாரிகள் இன்னும் அவற்றை செயல்படுத்தவில்லை.
எனவே, தெருநாய்களுக்கான உணவு மையங்களை அதிகாரிகள் உருவாக்கி பராமரிக்க நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’’ என்றார். இந்த மனு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் விக்ரம் நாத், சந்தீப் மேத்தா ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதி விக்ரம் நாத், மனுதாரரின் வழக்கறிஞரை பார்த்து கேள்வியெழுப்பினார்.
அவர் கூறும்போது, “தெருநாய்களுக்கு இந்த நகரில் அனைத்து இடங்களும் உள்ளன. மனிதர்களுக்குத்தான் இல்லை. நாங்கள் உங்களுக்கு (மனுதாரர்) ஒரு யோசனையை வழங்குகிறோம். உங்கள் சொந்த வீட்டில் ஒரு தங்குமிடத்தைத் திறந்து வைத்து, இந்த சமூகத்தில் உள்ள அனைத்து நாய்களுக்கு உங்கள் வீட்டிலேயே உணவளிக்க ஏற்பாடு செய்யுங்கள்.
நீங்கள் காலையில் தினந்தோறும் சைக்கிள் ஓட்டி பயிற்சியில் ஈடுபடுகிறீர்களா? இந்தக் கேள்விக்குப் பதில் ஆமாம் என்றால் சைக்கிளில் செல்பவர்களும், காலையில் நடைபயிற்சி மேற்கொள்பவர்களும், இரு சக்கர வாகன ஓட்டிகளும் நாய்களால் ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.
தெருநாய்களால் அவர்களது வாழ்வுக்கு அதிக அச்சுறுத்தல் உள்ளது” என்றார். இதைத் தொடர்ந்து மனுவை விசாரித்த நீதிபதிகள், தற்போது நடைபெற்று வரும் ஒரு வழக்கிலும் இதேபோன்ற கவலைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன என்றும், இந்த மனுவை, முந்தைய மனுக்களுடன் சேர்த்து விசாரிக்கிறோம் என்றும் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT