Last Updated : 15 Jul, 2025 06:28 PM

 

Published : 15 Jul 2025 06:28 PM
Last Updated : 15 Jul 2025 06:28 PM

பிரதமர், ஆர்எஸ்எஸ் குறித்து சர்ச்சைக்குரிய கார்ட்டூன் வரைந்தவரின் மனு மீதான உச்ச நீதிமன்ற உத்தரவு சொல்வது என்ன?

ஹேமந்த் மாளவியா

புதுடெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் குறித்து ஆட்சேபனைக்குரிய கார்ட்டூன்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த குற்றச்சாட்டில், கார்ட்டூனிஸ்ட் ஹேமந்த் மாளவியாவுக்கு கட்டாய கைது நடவடிக்கையில் இருந்து உச்ச நீதிமன்றம் இடைக்கால பாதுகாப்பு அளித்துள்ளது.

இருப்பினும், சமூக ஊடகங்களில் தொடர்ந்து பிறரை புண்படுத்தும் விதமான பதிவுகளைப் பகிர்ந்தால், சட்டத்தின் கீழ் ஹேமந்த் மாளவியா மீது நடவடிக்கை எடுக்க மாநில அரசுக்கு சுதந்திரம் உள்ளது என்று நீதிபதிகள் சுதன்ஷு துலியா மற்றும் அரவிந்த் குமார் அமர்வு எச்சரித்தது. மேலும், இந்த ஆட்சேபனைக்குரிய பதிவுகள் குறித்து மாளவியாவை கண்டித்த நீதிபதி துலியா, "இது மிகவும் அதிகப்படியானது. இப்போதெல்லாம், மக்கள் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எழுதுகிறார்கள், பேசுகிறார்கள்" என்று கூறினார்.

முன்னதாக, மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம் தனக்கு முன்ஜாமீன் வழங்க மறுத்ததை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கார்ட்டூனிஸ்ட் ஹேமந்த் மாளவியா மனுத் தாக்கல் செய்திருந்தார்.

வழக்கின் பின்புலம் என்ன? - மத்தியப் பிரதேசத்தின் இந்தூரைச் சேர்ந்த கார்ட்டூனிஸ்ட் ஹேமந்த் மாளவியா-வுக்கு எதிராக வழக்கறிஞரும் ஆர்எஸ்எஸ் பிரமுகருமான வினய் ஜோஷி என்பவர், இந்தூரில் உள்ள லசுடியா காவல் நிலையத்தில் புகார் அளித்திருந்தார். அதன்பேரில், ஹேமந்த் மாளவியாவுக்கு எதிராக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது.

வினய் ஜோஷி தனது புகாரில், “இந்துக்களின் மத உணர்வுகளை புண்படுத்தும் விதமாகவும், சிவபெருமான், பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பை அவமதிக்கும் நோக்கிலும் ஏராளமான கார்ட்டூன்கள், வீடியோக்கள், புகைப்படங்கள், கருத்துகளை ஹேமந்த் மாளவியா சமூக ஊடக பக்கங்களில் பகிர்ந்துள்ளார். அரசியலமைப்பு பிரிவு 19(1)(a)-ன்படி அவர் கருத்து சுதந்திரத்தை தவறாகப் பயன்படுத்தி உள்ளார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று கோரி இருந்தார்.

இந்த வழக்கை விசாரித்த மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றம், “ஹேமந்த் மாளவியாவின் படைப்புகள் நல்ல ரசனையிலோ அல்லது நல்ல நோக்கத்திலோ உருவாக்கப்பட்டவை அல்ல என்பது தெளிவாகிறது. மத உணர்வுகளை வேண்டுமென்றே காயப்படுத்தும் தீங்கிழைக்கும் முயற்சி இது. பேச்சு மற்றும் கருத்து சுதந்திரத்தின் வரம்பை ஹேமந்த் மாளவியா நிச்சயமாக மீறிவிட்டார்.

அவரை காவலில் எடுத்து விசாரிக்க வேண்டியது அவசியம் என இந்த நீதிமன்றம் கருதுகிறது. அவரது குற்றம் அதிகபட்சமாக 3 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கக் கூடியது” என தெரிவித்தது.

ஹேமந்த் மாளவியா சார்பில் ஆஜரான வழக்கறிஞர் விருந்தா குரோவர், முன்ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்தார். எனினும், முன்ஜாமீனை உயர் நீதிமன்றம் நிராகரித்துவிட்டது. இதையடுத்து, ஜாமீன் கோரி விருந்தா குரோவர் மூலம் ஹேமந்த் மாளவியா உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x