Last Updated : 15 Jul, 2025 05:52 PM

 

Published : 15 Jul 2025 05:52 PM
Last Updated : 15 Jul 2025 05:52 PM

பூமிக்கு திரும்பிய ஷுபன்ஷு சுக்லாவுக்கு பிரதமர் மோடி வரவேற்பு - குடும்பத்தினர் நெகிழ்ச்சி

குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா

புதுடெல்லி: சர்வதேச விண்வெளி நிலையத்துக்கான வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவை, நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்பதாக பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "விண்வெளிக்கான தனது வரலாற்றுச் சிறப்புமிக்க பயணத்தை நிறைவு செய்து பூமிக்குத் திரும்பியுள்ள குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லாவை நாட்டு மக்களுடன் இணைந்து வரவேற்கிறேன். சர்வதேச விண்வெளி நிலையத்தைப் பார்வையிட்ட இந்தியாவின் முதல் விண்வெளி வீரராக, அவர் தனது அர்ப்பணிப்பு, துணிச்சல் மற்றும் முன்னோடி மனப்பான்மை மூலம் கோடிக்கணக்கானவர்களின் கனவுகளை ஊக்குவித்துள்ளார். இது நமது சொந்த மனித விண்வெளி பயணமான ககன்யானை நோக்கிய மற்றுமொரு முக்கிய நடவடிக்கை" என தெரிவித்துள்ளார்.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள செய்தியில், "வரலாற்று சிறப்புமிக்க ஆக்சியம்-4 பயணத்திலிருந்து குரூப் கேப்டன் ஷுபன்ஷு சுக்லா வெற்றிகரமாக திரும்பியுள்ளார். இது ஒவ்வொரு இந்தியருக்கும் பெருமை தரும் தருணம். அவர் விண்வெளியை மட்டும் தொடவில்லை, இந்தியாவின் விருப்பங்களை புதிய உயரத்திற்கு உயர்த்தியுள்ளார்.

சர்வதேச விண்வெளி நிலையத்துக்குச் சென்று திரும்பிய அவரது பயணம் ஒரு தனிப்பட்ட மைல்கல் மட்டுமல்ல, இந்தியாவின் வளர்ந்து வரும் விண்வெளி லட்சியங்களுக்கான பெருமைமிக்க முன்னேற்றம். அவரது எதிர்கால முயற்சிகளில் அவருக்கு பெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துகிறேன்" என தெரிவித்துள்ளார்.

மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மற்றும் விண்வெளிக்கான மத்திய இணையமைச்சர் (தனிப்பொறுப்பு), ஜிதேந்திர சிங், "இது உண்மையிலேயே உலகுக்கு பெருமை சேர்க்கும் தருணம். இந்தியாவுக்கு பெருமை சேர்க்கும் தருணம். ஏனெனில் இந்தியாவின் மகன்களில் ஒருவரான அவர், தனது பயணத்தை வெற்றிகரமாக முடித்துக்கொண்டு திரும்பி உள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

குடும்பத்தினர் நெகிழ்ச்சி: ஷுபன்ஷு சுக்லா பத்திரமாக பூமிக்குத் திரும்பியதை அடுத்து, அவரது குடும்பத்தினர் மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கி உள்ளனர். லக்னோவில் செய்தியாளர்களிடம் பேசிய ஷுபன்ஷு சுக்லாவின் தந்தை ஷம்பு தயாள் சுக்லா, "ஷுபன்ஷு சுக்லா பாதுகாப்பாக தரையிறங்கியதற்கு நாங்கள் கடவுளுக்கு நன்றி கூறுகிறோம். பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் ஷுபன்ஷு சுக்லாவை ஆசிர்வதித்து எங்களுக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்" என்று தெரிவித்துள்ளார்.

ஷுபன்ஷு சுக்லாவின் சகோதரி சுச்சி மிஸ்ரா, "ஷுபன்ஷு சுக்லா பத்திரமாக பூமி திரும்பியது மகிழ்ச்சி அளிக்கிறது. அதோடு, அவரை பிரதமர் மோடி வாழ்த்தி இருப்பது எங்களுக்கு மிகவும் மகிழ்ச்சியை அளித்துள்ளது. ஷுபன்ஷு சுக்லா அனைத்து பாராட்டுகளுக்கும் தகுதியானவர். அவர் பாதுகாப்பாக பூமிக்குத் திரும்பியதால் நாங்கள் மிகவும் நிம்மதியாகவும் மகிழ்ச்சியாகவும் இருக்கிறோம்" என தெரிவித்துள்ளார்.

ஷுபன்ஷு சுக்லாவின் தாயார் ஆஷா சுக்லா, "எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த வார்த்தைகள் இல்லை... பிரதமர் மோடியும் அவரை வாழ்த்தினார்..." என நெகிழ்ந்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x