Last Updated : 15 Jul, 2025 10:18 AM

2  

Published : 15 Jul 2025 10:18 AM
Last Updated : 15 Jul 2025 10:18 AM

ஒடிசாவில் பாலியல் புகார் மீது நடவடிக்கை இல்லாததால் தீக்குளித்த மாணவி உயிரிழப்பு!

புவனேஸ்வரில் போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர் அமைப்பினர். 

புவனேஸ்வர்: ஒடிசா மாநிலத்தில் தனது பாலியல் புகார் மீது நடவடிக்கை எடுக்காத காரணத்தால் தீக்குளித்த கல்லூரி மாணவி சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை (ஜூலை 14) இரவு உயிரிழந்தார்.

20 வயதான அந்த மாணவி, பாலசோர் மாவட்டத்தில் இயங்கி வரும் கல்லூரி ஒன்றில் பி.எட் படித்து வந்துள்ளார். இந்நிலையில், அந்த கல்லூரியின் கல்​வி​யியல் துறை தலை​வ​ராக பணி​யாற்​றிய​ சமிரா குமார் சாகு, அந்த மாணவிக்கு தொடர்ச்சியாக பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். இது தொடர்பாக கல்லூரியில் புகார் குழுவில் பாதிக்கப்பட்ட மாணவி புகார் கூறியுள்ளார்.

இந்நிலையில், தனது புகார் மீது நடவடிக்கை எடுக்காதது தொடர்பாக கல்லூரியின் முதல்வரை கடந்த சனிக்கிழமை அன்று சந்தித்து பேசியுள்ளார். அதன் பின்னர் அந்த மாணவி கல்லூரி வளாகத்தில் தீக்குளித்தார். அதையடுத்து அங்கிருந்தவர்கள் அவரை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

90 சதவீத தீக்காயத்துடன் அந்த மாநிலத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் மேல் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அங்கு அந்த மாணவி உயிருக்கு போராடினார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி திங்கட்கிழமை இரவு காலமானார். இதை எய்ம்ஸ் மருத்துவமனை நிர்வாகம் உறுதி செய்துள்ளது. கடந்த 12-ம் தேதி அன்று பாலசோர் மாவட்ட தலைமை மருத்துவமனையில் இருந்து சிகிச்சைக்காக தீக்காயங்களுடன் மாணவி எய்ம்ஸ் - புவனேஸ்வரில் அனுமதிக்கப்பட்டார். தீவிர சிகிச்சை பிரிவில் அவருக்கு முறையான சிகிச்சை அளித்தோம். இந்நிலையில், திங்கட்கிழமை இரவு 11.46 மணி அளவில் அவர் உயிரிழந்தார் என எய்ம்ஸ் - புவனேஸ்வர் மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ஒடிசா முதல்வர் இரங்கல்: மாணவியின் மறைவுக்கு ஒடிசா மாநில முதல்வர் மோகன் சரண் மாஜி இரங்கல் தெரிவித்துள்ளார். மாணவியின் உயிரிழப்புக்கு காரணமானவர்கள் மீது சட்டரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் உறுதியளித்தார். மேலும், உயிரிழந்த மாணவியின் குடும்பத்துக்கு உறுதுணையாக அரசு இருக்கும் என்றும், நீதி கிடைப்பதற்கான ஆதரவை அரசு மேற்கொள்ளும் என்றும் மோகன் சரண் மாஜி தெரிவித்துள்ளார்.

கல்​வி​யியல் துறை தலை​வ​ராக பணி​யாற்​றிய​ சமிரா குமார் சாகு, உயிரிழந்த மாணவிக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்து வந்துள்ளார் என்பதை அவருடன் பயின்ற சக மாணவர்கள் உறுதி செய்துள்ளனர். உயிரிழந்த மாணவிக்கு மனரீதியாக சமிரா குமார் சாகு துன்புறுத்தி உள்ளார் என்பதையும் மாணவர்கள் தெரிவித்துள்ளனர்.

இது தொடர்பாக கல்லூரி நிர்வாகம், கல்லூரியின் முதல்வர் மற்றும் காவல் நிலையத்தில் உயிரிழந்த மாணவி புகார் அளித்ததாக தகவல். ஆனால், அதன் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் இருந்துள்ளனர். இதனால் மனமுடைந்த மாணவி தீக்குளித்து உயிரிழந்தார்.

மாணவி தீக்குளித்ததை அடுத்து சம்பந்தப்பட்ட கல்லூரியின் முதல்வர் திலீப் குமார் கோஷ் கைது செய்யப்பட்டார். அவர் 14 நாட்கள் நீதிமன்ற காவலில் சிறையில் அடைக்கப்பட்டார். பெண் பாதுகாப்பை உறுதி செய்ய தவறிய ஒடிசா மாநிலத்தில் தற்போது ஆளுங்கட்சியாயக உள்ள பாஜக மீது குற்றச்சாட்டினை எதிர்க்கட்சிகள் வைத்துள்ளன. இதனால் அங்கு அரசியல் ரீதியான அழுத்தம் நிலவி வருகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x