Published : 15 Jul 2025 08:15 AM
Last Updated : 15 Jul 2025 08:15 AM
புதுடெல்லி: மத்திய உள் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்திய இணையவழி (சைபர்) குற்ற ஒருங்கிணைப்பு மையம் (ஐ4சி), இணையவழி பண மோசடி தொடர்பான தகவல்களை திரட்டியது. இதன்படி, இந்த மோசடிகள் பெரும்பாலும் பாதுகாப்புமிக்க இடங்களில் இருந்து நடத்தப்படுவதும், சீன நிறுவனங்களால் கட்டுப்படுத்தப்படுவதும் தெரியவந்துள்ளது. இந்த ஆண்டு சைபர் மோசடிகள் பற்றி நடத்தப்பட்ட பகுப்பாய்வில், இதுபோன்ற குற்றங்களால் மாதந்தோறும் இந்தியர்கள் ரூ.1,000 கோடியை இழப்பதாக மதிப்பிடப்பட்டுள்ளது.
இந்த ஆண்டின் முதல் 5 மாதங்களில் சுமார் ரூ.7 ஆயிரம் கோடி அளவுக்கு இணைய வழியில் மோசடி நடந்துள்ளது. இதில் பாதிக்கும் மேற்பட்ட தொகை, மியான்மர், கம்போடியா, வியட்நாம், லாவோஸ் மற்றும் தாய்லாந்து ஆகிய நாடுகளில் இருந்து மோசடி செய்யப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதுகுறித்து உயர் அதிகாரி ஒருவர் கூறும்போது, “கடந்த ஜனவரி மாதத்தில் ரூ.1,192 கோடி, பிப்ரவரியில் ரூ.951 கோடி, மார்ச் மாதத்தில் ரூ.1,000 கோடி, ஏப்ரல் மாதத்தில் ரூ.731 கோடி, மே மாதத்தில் ரூ.999 கோடி மோசடி நடைபெற்றுள்ளது" என்றார்.
சமீபத்தில் இந்தியா வந்திருந்த கம்போடிய உயர் அதிகாரிகள், டெல்லியில் உயர் அதிகாரிகளை சந்தித்துப் பேசினர். அப்போது, கம்போடியாவிலிருந்து நடைபெறும் இணைய மோசடி குறித்து நடவடிக்கை எடுக்குமாறு இந்திய அதிகாரிகள் வலியுறுத்தினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT