Last Updated : 14 Jul, 2025 05:14 PM

1  

Published : 14 Jul 2025 05:14 PM
Last Updated : 14 Jul 2025 05:14 PM

தியாகிகள் கல்லறைக்குச் செல்ல அனுமதி மறுப்பு - சுவர் ஏறி குதித்த முதல்வர் உமர் அப்துல்லா

தியாகிகள் கல்லறையில் அஞ்சலி செலுத்திய முதல்வர் உமர் அப்துல்லா உள்ளிட்டோர்

ஸ்ரீநகர்: தியாகிகளின் கல்லறைக்குச் செல்ல முதல்வர் உமர் அப்துல்லாவுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், அவர் சுவர் ஏறி குறித்துச் சென்று அஞ்சலி செலுத்தினார்.

ஜம்மு காஷ்மீரை மகாராஜா ஹரி சிங் ஆட்சி செய்து கொண்டிருந்தபோது 1931-ம் ஆண்டு ஏற்பட்ட கிளர்ச்சியில் கொல்லப்பட்ட 21 பேரின் நினைவாக ஸ்ரீநகரில் தியாகிகளின் கல்லறை அமைக்கப்பட்டது. அவர்களின் நினைவாக ஜூலை 13-ம் தேதியை தியாகிகள் நினைவு தினமாக தேசிய மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட சில இயக்கங்கள் அனுசரித்து வருகின்றன.

இந்நிலையில், இந்த ஆண்டு தியாகிகள் நினைவு தினமான நேற்று உமர் அப்துல்லா டெல்லியில் இருந்தார். இதை பலர் விமர்சித்த நிலையில், நேற்று மதியம் டெல்லியில் இருந்து உமர் அப்துல்லா டெல்லி வந்தார். இதனிடையே, தியாகிகள் நினைவிடத்துக்குச் செல்வதற்கு தடை விதித்து போலீஸார் உத்தரவு பிறப்பித்திருந்தனர். மேலும், அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர்.

காவல் துறைக்கு தகவல் தெரிவிக்காமல் நினைவிடம் நோக்கி உமர் அப்துல்லா சென்றபோது போலீஸார் அவரை தடுத்து நிறுத்தினர். இதனால், வாகனத்தில் இருந்து கீழே இறங்கி நடந்து சென்றார். அவருடன் கட்சியினரும், பாதுகாப்பு அதிகாரிகளும் உடன் சென்றனர். கல்லறைக்குள் செல்வதற்கான வாசல் அடைக்கப்பட்டிருந்த நிலையில், கல்லறையின் சுற்றுச் சுவர் மீது ஏறி பின்னர் அதன் மீது அமைக்கப்பட்டிருந்த இரும்பு தடுப்புகள் மீதும் ஏறி கீழே குதித்து உமர் அப்துல்லா கல்லறைக்குள் சென்றார்.

அதன் பிறகு வாசல் திறக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவர் ஃபரூக் அப்துல்லா, மாநில அமைச்சர்கள், சட்டப்பேரவை உறுப்பினர்கள் உள்ளிட்டோர் கல்லறைக்குள் சென்று அஞ்சலி செலுத்தினர். மேலும், அங்குள்ள நினைவிடங்களில் மலர்களைத் தூவி மரியாதை செலுத்தினர்.

இது குறித்து உமர் அப்துல்லா வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "தியாகிகளின் கல்லறைகளில் எனது அஞ்சலியைச் செலுத்தினேன். தேர்ந்தெடுக்கப்படாத அரசாங்கம் என்னை நவட்டா சௌக்கிலிருந்து நடந்து செல்ல கட்டாயப்படுத்தியது. என் வழியைத் தடுக்க முயன்றது. கல்லறை வாயிலை தடுத்து நிறுத்தி, சுவரில் ஏறும்படி கட்டாயப்படுத்தினர். அவர்கள் என்னை தடுக்கவும் பிடிக்கவும் முயன்றனர். ஆனால், அவர்களால் என்னை தடுக்க முடியவில்லை" என தெரிவித்துள்ளார்.

மேலும், போலீஸார் தன்னை தடுக்க முயலும் வீடியோவை தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ள உமர் அப்துல்லா, "என்னை தடுக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அது நிறைவேறவில்லை. நான் சட்டவிரோதமான எதையும் செய்யவில்லை. உண்மையில், சட்டத்தை பாதுகாப்பவர்கள் எந்த சட்டத்தின் கீழ் நாங்கள் அஞ்சலி செலுத்த முயன்றதை தடுத்தனர் என்பதை விளக்க வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

உமர் அப்துல்லாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ள மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, "தியாகிகளின் கல்லறைக்குச் செல்வதில் என்ன தவறு இருக்கிறது? உமர் அப்துல்லா தடுக்கப்பட்டது துரதிருஷ்டவசமானது மட்டுமல்ல ஒரு குடிமகனின் ஜனநாயக உரிமையை பறிக்கும் செயலும்கூட. தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு இன்று என்ன நடந்ததோ அது ஏற்றுக்கொள்ள முடியாதது, அதிர்ச்சி அளிக்கக்கூடியது, வெட்கக்கேடானது" என கண்டித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x