Last Updated : 14 Jul, 2025 02:24 PM

 

Published : 14 Jul 2025 02:24 PM
Last Updated : 14 Jul 2025 02:24 PM

மாநிலங்களவையின் புதிய நியமன எம்.பி.க்களின் பின்புலம் என்ன?

புதுடெல்லி: குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு நியமித்துள்ள மாநிலங்களவைக்கானப் புதிய நியமன எம்.பி.க்களின் விவரம் வெளியாகி உள்ளது.

இந்திய அரசியலமைப்பின் பிரிவு 80(1)(ஏ) கீழ் நாடாளுமன்ற மாநிலங்களவைக்கு நியமன உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இதன் மூலம், நாட்டின் உயரிய அமைப்பான நாடாளுமன்றத்திற்கு பல்வேறு துறைகளின் நிபுணர்களும் பங்கு பெறும் வாய்ப்பு கிடைக்கிறது.

மத்திய அரசின் பரிந்துரையின் பேரில் மாநிலங்களவைக்கு புதிதாக நான்கு எம்.பிக்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்களில், மூத்த வழக்கறிஞரான உஜ்வால் நிகம், ஓய்வு பெற்ற அரசு அதிகாரி ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா, சமூக சேவகர் சி.சதானந்தன் மாஸ்டர் மற்றும் வரலாற்றாளரான முனைவர். மீனாட்சி ஜெயின் ஆகியோர் இடம் பெற்றுள்ளனர். இவர்கள், சட்டம், வெளியுறவுக் கொள்கை, கல்வி மற்றும் வரலாறு ஆகிய நான்கு துறைகளில் குறிப்பிடத்தக்கப் பங்களிப்புகளைச் செய்துள்ளனர்.

உஜ்வால்: மகராஷ்டிராவைச் சேர்ந்த உஜ்வால் தேவ்ராவ் நிகம். மூத்த வழக்கறிஞரான உஜ்வால், நாட்டின் மிகவும் பிரபல வழக்கான 26/11 மும்பை தாக்குதல் வழக்கில் அரசு சார்பில் ஆஜரானவர். இதில் உயிருடன் சிக்கிய பாகிஸ்தானின் அஜ்மல் கசாபிற்கு தூக்கு தண்டனை பெற்றுத் தந்தவர். உஜ்வலுக்கு 2016ல் பத்ம ஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்தியாவில் நீதி அமைப்பின் வலிமையின் அடையாளமாக அவர் கருதப்படுகிறார்.

2024 மக்களவை தேர்தலில் மும்பை மத்திய வடக்கு தொகுதியில் பாஜகவின் வேட்பாளராக இருந்தவர். இதற்கு முன் இவர், 1993 மும்பை குண்டு வெடிப்பு, குல்ஷன் குமார் கொலை வழக்கு, பிரமோத் மகாஜன் கொலை வழக்கு மற்றும் கோபார்டி பாலியல் வன்கொடுமை உள்ளிட்ட பல வழக்குகளில் வாதிட்டவர்.

சதானந்தன் மாஸ்டர்: கேரளத்தைச் சேர்ந்த சி.சதானந்தன் மாஸ்டர். சமூக சேவகர் மற்றும் கல்வியாளர். இவர் தேசிய ஆசிரியர் சங்கத்தின் மத்திய துணைத் தலைவராகவும், 'தேசிய ஆசிரியர் செய்திகள்' இதழின் ஆசிரியராகவும் உள்ளார். கடந்த 2016, 2021 சட்டப்பேரவை தேர்தல்களில் கேரளாவின் கண்ணூர் தொகுதியில் பாஜகவிற்காகப் போட்டியிட்டிருந்தார்.

இடதுசாரி கட்சிகள் ஆளும் கேரளாவில் காலூன்றுவதில் பாஜகவினருக்கு சதானந்தன், தொடர்ந்து ஊக்கப்படுத்தி வருபவர். கடந்த 1994ல் நடந்த ஒரு அரசியல் தாக்குதலில் தனது இரண்டு கால்களையும் இழந்த போதிலும், அவர் சமூக சேவை மற்றும் கல்வியை தனது வாழ்க்கையின் நோக்கமாகக் கொண்டு செயல்படுகிறார்.

ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா: ஓய்வு பெற்ற ஐஎப்எஸ் 1984 பேட்ச்சின் அதிகாரியான ஹர்ஷ்வர்தன் ஷ்ரிங்லா பல வெளிநாடுகளில் பணியாற்றியுள்ளார். அமெரிக்கா, வங்கதேசம் மற்றும் தாய்லாந்திற்கான இந்தியாவின் தூதராகப் பணியாற்றியுள்ளார். இவர் 2020 முதல் 2022 வரை இந்தியாவின் வெளியுறவு செயலாளராக இருந்தார்.

மேலும் இந்தியாவின் மூலோபாய வெளியுறவுக் கொள்கையை வடிவமைப்பதில் இவரது பங்கு குறிப்பிடத்தக்கது. சமீபத்தில், இந்தியாவின் ஜி-20 தலைமை ஒருங்கிணைப்பாளராகப் பணியாற்றினார். மத்திய அரசின் வெளியுறத்துறை செயல்பாடுகளில் ஹர்ஷ் வர்தன் பங்கு மிகவும் முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

மீனாட்சி ஜெயின்: டெல்லி பல்கலைக்கழகத்தின் ஓய்வுபெற்றப் பேராசிரியரான முனைவர் மீனாட்சி ஜெயின். இவர் ஒரு புகழ்பெற்ற வரலாற்றாசிரியர். அவர் டெல்லி பல்கலைக்கழகத்தின் கீழ் உள்ள கார்கி கல்லூரியில் வரலாற்றைக் கற்பித்துள்ளார். இந்திய கலாச்சார பாரம்பரியம் குறித்த ஆய்வில் முனைவர் படம் பெற்றுள்ளார். மீனாட்சியின் ஆய்வுப் பணி சர்வதேச அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது.

அவர் 'சதி', 'ராமர் மற்றும் அயோத்தி' மற்றும் 'தெய்வங்களின் விமானம்' போன்ற பிரபலமான வரலாற்று நூல்களை எழுதியுள்ளார். முனைவர். மீனாட்சியின் கல்விப் பங்களிப்பைப் பாராட்டி அவருக்கு 2020-ல் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. இந்திய வரலாறு மற்றும் மரபுகள் குறித்த ஆராய்ச்சிக்காக அறியப்படுகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x