Published : 14 Jul 2025 07:39 AM
Last Updated : 14 Jul 2025 07:39 AM
பெங்களூரு: கர்நாடகாவில் அடர் வனப்பகுதியில் உள்ள குகையில் ரஷ்யாவை சேர்ந்த பெண் ஒருவர் தனது 2 மகள்களுடன் தங்கி இருந்தார். அவரை அம்மாநில போலீஸார் பத்திரமாக மீட்டனர். கர்நாடகா மாநிலம் உத்தர கன்னடா மாவட்டம் கோகர்ணா அருகே ராமதீர்த்தா மலை அமைந்துள்ளது.
அங்குள்ள வனப்பகுதியில் சுற்றுலாப் பயணிகள் சட்டவிரோதமாக மலையேற்றம், சவாரி ஆகியவற்றில் ஈடுபடுவதாக போலீஸாருக்கு தகவல் கிடைத்தது.
இதையடுத்து கோகர்ணா காவல் நிலைய ஆய்வாளர் தர் தலைமையிலான காவல் துறையினர் கடந்த 9-ம் தேதி ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது வனப்பகுதியில் நிலச்சரிவு அபாயம் மிகுந்த பகுதியில் உள்ள குகையில் பெண் ஒருவர் தங்கியிருப்பதை கண்டறிந்தனர். இதையடுத்து 3 பேரையும் போலீஸார் பத்திரமாக மீட்டு விசாரணை நடத்தினர்.
ஆன்மிகத்தில் நாட்டம்: இதுகுறித்து போலீஸார் கூறியதாவது: குகையில் இருந்து மீட்கப்பட்ட பெண்ணின் பெயர் நினா குடினா (40). ரஷ்யாவை சேர்ந்த அவர் தனது மூத்த மகள் பிரேமா (6), இளைய மகள் அமா (4) ஆகியோருடன் கடந்த 2017-ம் ஆண்டு கோவாவுக்கு சுற்றுலா பயணியாக வந்தார். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்ட அவர், இங்குள்ள சாமியார்களின் மடங்களில் தங்கி யோகாசனம் கற்றுள்ளார்.
2018 ஏப்ரல் 19-ல் நேபாளத்துக்கு சென்றுள்ளார். அங்கிருந்து மீண்டும் கோவாவுக்கு வந்த நினா, சட்டவிரோதமாக இந்தியாவில் தங்கியிருந்தார் கோவாவில் இருந்து கடந்த மே மாதம் கோகர்ணா வந்த நினா, உள்ளூர் சாமியார் ஒருவரின் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். பின்னர் அவரது அறிவுரையின் பேரில் குகையில் தியானம் செய்ய அங்கு சென்றுள்ளார்.
ஒரு வாரமாக அங்கு தங்கியிருந்த 3 பேரையும் மீட்டு, தேவையான சிகிச்சையும் உளவியல் சிகிச்சையும் வழங்கப்பட்டது. அதன் பிறகு சுவாமி யோகரத்னா சரஸ்வதி நடத்தும் ஆசிரமத்துக்கு அனுப்பி வைத்திருக்கிறோம். அவரை ரஷ்யாவுக்கு மீண்டும் அனுப்பி வைக்க நடவடிக்கை எடுத்து வருகின்றோம். இவ்வாறு போலீஸார் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT