Published : 12 Jul 2025 01:02 PM
Last Updated : 12 Jul 2025 01:02 PM
வதோதரா: குஜராத் மாநிலத்தில் ஆற்றுப் பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக அதிகரித்துள்ளது. மஹிசாகர் பாலம் இடிந்து விழுந்த இடத்தில் தொடர்ந்து நான்காவது நாளாக தேடுதல் மற்றும் மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.
குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் மஹிசாகர் ஆற்றின் குறுக்கே இருந்த கம்பீரா - முஜிப்புர் பாலம் கடந்த ஜூலை 9ம் தேதி திடீரென இடிந்து விழுந்தது. இந்த விபத்து நடந்த இடத்தில் 4வது நாளாக மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. இந்த பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 20 ஆக உயர்ந்துள்ளது.
மேலும், பாலம் இடிந்து விழுந்து ஆற்றில் மூழ்கி காணாமல் போன ஒருவரை தேடும் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது. அதனுடன், ஆற்றில் மூழ்கிய வாகனங்களை ஆற்றில் இருந்து அகற்றும் பணியும் தொடர்ந்து நடந்து வருகிறது. இந்தப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படை, மாநில பேரிடர் மீட்புப் படை மற்றும் காவல்துறையினர் இணைந்து செயல்பட்டு வருகின்றனர்.
வதோதரா மாவட்ட ஆட்சியர் அனில் தமேலியா பேசுகையில், ‘இன்று நடைபெறும் மீட்புப் பணியில் இடிந்து விழுந்த பாலத்தின் பிரதான பகுதியை அகற்றி, காணாமல் போனவரின் உடலை மீட்க ஒரு தொழில்நுட்பக் குழு நடவடிக்கை எடுக்கும். சல்பூரிக் அமிலத்தை ஏற்றிச் சென்று நீரில் மூழ்கிய டேங்கரை பாதுகாப்பாக மீட்க குஜராத் மாசு கட்டுப்பாட்டு வாரியமும் அந்தப் பணியில் ஈடுபடும். மேலும், அந்த டேங்கரில் கசிவு ஏற்படாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன” என்று அவர் கூறினார்.
விபத்து நடந்தது எப்படி? - குஜராத் மாநிலம் வதோதரா மாவட்டம் பத்ரா தாலுகாவில் மஹிசாகர் (மஹி) ஆற்றின் குறுக்கே கம்பீரா - முஜிப்புர் பகுதிகளை இணைக்கும் பாலம் உள்ளது. கடந்த ஜூலை 9ம் தேதி காலை 7.30 மணியளவில் திடீரென பாலத்தின் ஒரு பகுதி இடிந்து ஆற்றில் விழுந்தது. இதனால் பாலத்தில் சென்ற பலர் வாகனங்களுடன் ஆற்றில் விழுந்தனர். அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஆற்றில் நீந்திச்சென்று பலரை மீட்டனர். தகவலறிந்து விரைந்துவந்த போலீஸார், தீயணைப்புப் படையினர், மாநில மீட்புப் படையினர் மீட்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்த பாலம் ஆனந்த் மாவட்டத்தையும், வதோதரா மாவட்டத்தையும் இணைக்கும் வகையில் அமைக்கப்பட்டு இருந்தது. பாலம் இடிந்து விழுந்தது குறித்து உடனடியாக விசாரணை நடத்தப்பட்டது. முதல்கட்ட விசாரணையில் பாலத்தின் மீது சென்று கொண்டிருந்த 2 டிரக்குகள், எஸ்யுவி கார், வேன் உள்ளிட்ட வாகனங்கள் ஆற்றில் விழுந்தது தெரியவந்துள்ளது. பாலம் இடிந்து விழுந்ததை நேரில் பார்த்த பொதுமக்கள் கூறும்போது, ‘‘பாலத்தில் விரிசல் விடும் சப்தம் பயங்கரமாக கேட்டது. சில விநாடிகளில் பாலத்தின் ஒரு பகுதி அப்படியே இடிந்து விழுந்தது’’ என்றனர்.
குஜராத் மாநில அரசு சார்பில், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.4 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் நிவாரணம் வழங்கப்படும் என்றும், முழு மருத்துவ சிகிச்சைக்கான செலவை அரசு ஏற்கும் என்றும் முதல்வர் பூபேந்திர படேல் அறிவித்துள்ளார். மேலும், உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு ரூ.2 லட்சம், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும் எனப் பிரதமரும் அறிவித்திருந்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT