Published : 12 Jul 2025 12:59 PM
Last Updated : 12 Jul 2025 12:59 PM
புதுடெல்லி: அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்குப் புறப்பட்ட விமானம் விபத்துக்குள்ளானதற்கு அதன் 2 இன்ஜின்களும் ஷட் டவுன் ஆனதே காரணம் என்பது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது.
குஜராத்தின் அகமதாபாத் விமான நிலையத்திலிருந்து லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் கடந்த ஜூன் 12-ம் தேதி விபத்தில் சிக்கியது. இதில் விமானத்தில் பயணம் செய்த 241 பேர் உயிரிழந்தனர். பிரிட்டிஷ் - இந்திய பயணி ஒருவர் மட்டும் உயிர் பிழைத்தார். விமானம் மருத்துவக் கல்லூரி விடுதியில் மோதியதில் மருத்துவ மாணவர்கள் உட்பட 33 பேர் உயிரிழந்தனர்.
இந்த விபத்து குறித்து விமான விபத்துக்கான புலனாய்வு அமைப்பு (ஏஏஐபி) விசாரணை நடத்தி வருகிறது. இதில், இந்திய விமானப் படை, இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (ஹெச்ஏஎல்), அமெரிக்க தேசிய போக்குவரத்து பாதுகாப்பு வாரியம் ஆகியவற்றின் தொழில்நுட்ப வல்லுநர்கள் இடம்பெற்றுள்ளனர். ஏஏஐபி-ன் இயக்குநர் ஜெனரல் தலைமையில் விசாரணை நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், இந்த விசாரணையின் முதற்கட்ட அறிக்கை தற்போது வெளியாகி உள்ளது. அதில், "விமானத்தின் 2 இன்ஜின்களுக்கும் எரிபொருள் ஓட்டத்தைக் கட்டுப்படுத்தும் சுவிட்சுகள் உள்ளன. அந்த சுவிட்சுகள் ‘ரன்’ என்ற நிலையில் இருந்தால், எரிபொருள் சென்று கொண்டிருக்கும். ‘கட் ஆஃப்’ நிலையில் இருந்தால் என்ஜினுக்கு எரிபொருள் செல்லாது. விமானம் புறப்படத் தொடங்கிய உடன் திடீரென ஒரு நொடிக்குள் ரன் என்ற நிலையில் இருந்து ‘கட் ஆஃப்’ என்ற நிலைக்கு சுவிட்சுகள் மாறி உள்ளன.
உடனடியாக, ஒரு விமானி ஏன் துண்டித்தீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு மற்ற விமானி, நான் துண்டிக்கவில்லை என பதில் அளிக்கிறார். இந்த உரையாடல் காக்பிட் குரல் பதிவில் பதிவாகி இருக்கிறது. சுவிட்சுகள் கட்ஆஃப் நிலைக்கு மாறியதும், என்ஜினுக்கு எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
உடனடியாக ரன் நிலைக்கு சுவிட்ச் நகர்த்தப்பட்டதை கருப்புப் பெட்டியில் பதிவான தரவுகள் தெரிவிக்கின்றன. அப்போது, முதல் என்ஜின் செயல்படுவதற்கான அறிகுறி தென்பட்டுள்ளது. எனினும், இரண்டாவது என்ஜின் செயல்படவில்லை. முதல் என்ஜின் செயல்படுவதற்கான அறிகுறி தென்படத் தொடங்கியதும் விமானம் மீண்டும் மேலே செல்வதற்கான முயற்சி இருந்தது. எனினும், இரண்டாவது என்ஜின் ஷட் டவுன் ஆகியதால், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.
விமானம் மொத்தம் 32 வினாடிகள் மட்டுமே காற்றில் பறந்தது. சரியாக பிற்பகல் 1.39 மணிக்கு விபத்து நிகழ்ந்துள்ளது. விமானம் 0.9 கடல் மைல் மட்டுமே பயணித்துள்ளது.
விமான விபத்துக்கு நாசவேலை காரணமாக இருப்பதற்கான உடனடி ஆதாரங்கள் ஏதும் இல்லை. மேலும், வானிலை பிரச்சினைகள் எதுவும் காரணமாக இருக்கவில்லை. வானம் தெளிவாக இருந்தது. காற்று மிகவும் வலுவாக இல்லை. விமானிகள் ஆரோக்கிமானவர்களாகவே இருந்துள்ளனர். போதிய ஓய்வை எடுத்துள்ளனர். மேலும், இந்த வகை விமானத்தை இயக்குவதில் அவர்களுக்கு போதிய அனுபவம் உள்ளது" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT