Published : 12 Jul 2025 08:43 AM
Last Updated : 12 Jul 2025 08:43 AM

சட்டப்பேரவை கேன்டீன் ஊழியரை தாக்கிய சிவசேனா எம்எல்ஏ மீது மும்பை போலீஸ் வழக்குப் பதிவு

மும்பை: மகாராஷ்டிரா சட்டப் பேரவை வளாகத்தில் உள்ள ஆகாஷ்வானி எம்எல்ஏ கேன்டீனில் வழங்கப்படும் உணவின் தரம் மோசமாக இருப்பதாக சிவ சேனா கட்சி எம்எல்ஏ சஞ்சய் கெய்க்வாட் தனது ஆதரவாளர்களுடன் சென்றார். அங்கு பிளாஸ்டிக் பாக்கெட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களை முகர்ந்து பார்த்தார்.

கேன்டீன் ஒப்பந்ததாரரை அழைத்து உணவுப் பொருட்களின் பாக்கெட்டை முகர்ந்து பார்க்கும் படி கூறினார். பின் அவரை கன்னத்தில் அறைந்து தாக்கினார். இந்த வீடியோ வைரலாக பரவியது. இதையடுத்து அரசியல் கட்சியினர் பலர், சிவசேனா எம்எல்ஏ கெய்க்வாட்டின் செயலை கண்டித்தனர்.

கெய்க்வாட் மீது யாரும் புகார் கொடுக்காததால் அவர் மீது போலீஸார் நடவடிக்கை எடுக்க முடியாது என மாநில உள்துறை இணையமைச்சர் யோகேஷ் கடம் கூறினார். இந்நிலையில் மாநில முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் அளித்த பேட்டியில், ‘‘கேன்டீன் ஊழியரை எம்எல்ஏ தாக்கியது அதிகார துஷ்பிரயோகம். புகார் கொடுத்தால்தான் விசாரிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.

போலீஸார் தாமாக வழக்குப்பதிவு செய்து விசாரிக்கலாம்’’ என்றார். இதையடுத்து கெய்க்வாட் மீது மும்பை கடற்கரை போலீஸார் வழக்குப்பதிவு செய்தனர். இச்சம்பவத்தையடுத்து எம்எல்ஏ கேன்டீனில் மகாராஷ்டிரா உணவு மற்றும் மருந்து பொருள் நிர்வாகத்துறை சோதனை செய்தது. அங்கு விதிமீறல் இருந்ததால், கேட்டீனுக்கு வழங்கப்பட்ட உரிமம் ரத்து செய்யப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x