Published : 12 Jul 2025 08:04 AM
Last Updated : 12 Jul 2025 08:04 AM
திருமலை: மத்திய உள்துறை இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் நேற்று திருப்பதி ஏழுமலையானை தரிசனம் செய்தார். அவருக்கு தேவஸ்தானம் சார்பில் தரிசன ஏற்பாடுகள் செய்யப்பட்டன. அதன்பின்னர், கோயிலில் உள்ள ரங்கநாயக மண்டபத்தில் அவருக்கு தீர்த்த, பிரசாதங்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
அதன் பின்னர், கோயிலுக்கு வெளியே அவர் கூறியதாவது: திருமலை திருப்பதி தேவஸ்தானத்தில் தவறான சான்றிதழ்கள் கொடுத்து, தாங்கள் இந்துக்கள்தான் என சித்தரித்து, வேலை வாய்ப்பை பெற்று சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்ட இதர மதத்தினர் தேவஸ்தானத்தில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை உடனடியாக இனம் கண்டு அனைவரையும் வேலையை விட்டு நீக்க வேண்டும்.
இவர்களுக்கு சனாதனம் மீது நம்பிக்கை இல்லாத போது, எதற்காக திருப்பதி தேவஸ்தானத்தில் பணிபுரிய வேண்டும். இந்துக்களில் யாராவது இது போல், மசூதிகள் மற்றும் தேவாலயங்களில் ஊழியர்களாக பணி செய்ய அந்த மதத்தவர் ஒப்புக்கொள்வார்களா? இவர்கள் திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றுவதன் மூலம் உண்மையான இந்துக்களுக்கு அந்த வேலை பறிபோனது.
ஆட்சிகள் பல மாறினாலும், அறங்காவலர்கள் பலர் மாறினாலும் வேற்று மதத்தவர் மட்டும் தொடர்ந்து பணியாற்றி கொண்டே உள்ளனர். இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும். உடனடியாக திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்றும் இந்து அல்லாதவர்களை இனம் காண வேண்டும். அவர்களை உடனடியாக அப்பணியில் இருந்து நீக்க வேண்டும்.
சமீபத்தில் திருப்பதி தேவஸ்தானத்தில் பல ஆண்டுகளாக பணியாற்றி வந்த வேற்று மதத்தை சேர்ந்த ஒரு அதிகாரி, புத்தூருக்கு சென்று, அங்குள்ள தேவாலாயத்தில் பிரார்த்தனை செய்து வருகிறார் என தெரிந்து, அவரை தேவஸ்தானம் பணி நீக்கம் செய்தது. இப்படி சுமார் ஆயிரம் பேர் திருப்பதி தேவஸ்தானத்தில் இந்துக்கள் எனும் போர்வையில் பணியாற்றி வருகின்றனர். இவர்களை விசாரணை செய்து பணி நீக்கம் செய்ய வேண்டும் என நான் வலியுறுத்துகிறேன்.
மேலும், ஆந்திரா, தெலங்கானா ஆகிய மாநிலங்களில் தீப, தூப, நைவேத்தியங்கள் கூட செய்ய முடியாத பல கோயில்கள் உள்ளன. அவற்றிற்கு திருப்பதி தேவஸ்தானம் உதவிட வேண்டும். ஏழுமலையான் மீது உண்மையான பக்தி கொண்டவர்கள் மட்டுமே திருப்பதி தேவஸ்தானத்தில் பணியாற்ற வேண்டும். இவ்வாறு இணை அமைச்சர் பண்டி சஞ்சய் குமார் பேசினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT