Last Updated : 11 Jul, 2025 03:17 PM

3  

Published : 11 Jul 2025 03:17 PM
Last Updated : 11 Jul 2025 03:17 PM

மகாராஷ்டிராவை போல பிஹார் தேர்தலையும் 'திருட' பாஜக முயற்சி: ராகுல் குற்றச்சாட்டு

புவனேஸ்வர்: மகாராஷ்டிர சட்டப்பேரவைத் தேர்தலைப் போல, பிஹார் தேர்தலையும் திருட பாஜக முயல்கிறது என்று காங்கிரஸ் மூத்த தலைவரும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவருமான ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் நடைபெற்ற காங்கிரஸ் பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி, "ஒடிசா பாஜக அரசாங்கம் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்கிறது. அது, ஏழை மக்களிடமிருந்து ஒடிசாவின் செல்வத்தைத் திருடுவது. முன்பு பிஜு ஜனதா தள அரசு இதைச் செய்தது. இப்போது பாஜக அரசும் அதையே செய்கிறது. ஒருபக்கம், ஒடிசாவின் ஏழைகள், தலித்துகள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், நலிந்த பிரிவினர், விவசாயிகள், தொழிலாளர்கள் உள்ளனர். மறுபக்கம், 5-6 பெரும் பணக்காரர்களுடன் கை கோத்துக்கொண்டு பாஜக அரசாங்கம் உள்ளது.

நான் விவசாயிகள், பெண்கள் குழுக்களைச் சந்தித்தேன். அவர்கள் சொல்வதைக் கேட்டேன். அவர்களின் வலியையும் துன்பத்தையும் கேட்டேன். பழங்குடியினர் வாழும் பகுதிகளில் உள்ள நீர், காடு, நிலம் ஆகியவை அவர்களுக்குச் சொந்தமானவை. ஆனால், பழங்குடியினர் அவர்களின் நிலத்திலிருந்து வெளியேற்றப்படுகிறார்கள். PESA சட்டம் செயல்படுத்தப்படுவதில்லை. பழங்குடியினருக்கு குத்தகை வழங்கப்படுவதில்லை. காங்கிரஸ் கட்சி PESA சட்டத்தையும் பழங்குடியினர் மசோதாவையும் கொண்டு வந்தது. நாங்கள் இந்தச் சட்டங்களைச் செயல்படுத்தி, பழங்குடியினரின் நிலத்தை மீட்டெடுப்போம்.

நாட்டில் வளர்ச்சி என்பது 2-3% மக்களுக்காகவோ அல்லது 2-3 பெரும் பணக்காரர்களுக்காகவோ அல்ல. இங்குள்ள அரசாங்கம் உங்கள் பணத்தையும், உங்கள் காடுகளையும், உங்கள் நிலத்தையும் 24 மணி நேரமும் உங்களிடமிருந்து பறிக்கிறது. அது உங்களை உங்கள் நிலத்திலிருந்து அப்புறப்படுத்துகிறது. உங்களுக்கு சரியான இழப்பீடு வழங்கப்படுவதில்லை. இந்த அரசாங்கம் உங்களை அச்சுறுத்துகிறது.

பழங்குடி சகோதரர்கள், விவசாயிகள், தொழிலாளர்கள் என அரசாங்கத்தால் தாக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும், ஒடுக்கப்படுபவர்கள் யாராக இருந்தாலும் அவர்களுக்கு ஆதரவாக காங்கிரஸ் தலைவர்கள் நிற்பார்கள், நான் நிற்பேன். பாஜக தொடர்ந்து அரசியலமைப்பைத் தாக்கி வருகிறது. மகாராஷ்டிராவில் தேர்தல்கள் திருடப்பட்டது போல, பிஹாரிலும் தேர்தல்களைத் திருட அக்கட்சி முயல்கிறது. இதற்கு துணை போக தேர்தல் ஆணையம் ஒரு புதிய சதியை தொடங்கியுள்ளது. தேர்தல் ஆணையம் தனக்கான வேலைகளைச் செய்யாமல், பாஜகவுக்காக வேலை செய்கிறது.

மகாராஷ்டிராவில் மக்களவை மற்றும் சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கு இடையில் ஒரு கோடி புதிய வாக்காளர்கள் உருவானார்கள். இந்த வாக்காளர்கள் யார், அவர்கள் எங்கிருந்து வந்தார்கள் என்பது இதுவரை யாருக்கும் தெரியாது. வாக்காளர் பட்டியல் மற்றும் வாக்குப்பதிவின்போது எடுக்கப்பட்ட சிசிடிவி பதிவுகளை தருமாறு தேர்தல் ஆணையத்திடம் பலமுறை கூறியுள்ளோம். ஆனால் தேர்தல் ஆணையம் அதை எங்களுக்குத் தரவில்லை. பிஹார் தேர்தலை திருட இவர்கள் முயல்கிறார்கள். ஆனால் இதை நாங்கள் ஒருபோதும் நடக்க விடமாட்டோம்" என்று தெரிவித்தார். வாசிக்க > அது என்ன ‘SIR’? - பிஹார் வாக்காளர் பட்டியலில் ‘சிறப்புத் தீவிர திருத்தம்’ சலசலப்பும் பின்னணியும்!

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x