Last Updated : 10 Jul, 2025 04:44 PM

9  

Published : 10 Jul 2025 04:44 PM
Last Updated : 10 Jul 2025 04:44 PM

SIR-க்கு ஆதார் ஏற்கப்படாதது ஏன்? - பிஹார் வாக்காளர் பட்டியல் விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் கேள்வி

பிஹாரில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி. | படம்: சஷி சேகர் காஷ்யப்

புதுடெல்லி: ‘பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலையொட்டிய சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ((Special Intensive Revision - SIR) நடவடிக்கைகு ஆதார் அட்டையை ஓர் அடையாள ஆவணமாக ஏற்காதது ஏன்?’ என்று இந்திய தேர்தல் ஆணையத்துக்கு உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பி உள்ளது. மேலும், ‘ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை செல்லுபடியாகும் ஆவணமாக பரிசீலிக்க வேண்டும்’ என்றும் உச்ச நீதிமன்றம் பரிந்துரைத்துள்ளது.

பிஹாரில் இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இந்நிலையில், தகு​தி​யான குடிமக்​களின் பெயர்​களை வாக்​காளர் பட்​டியலில் சேர்ப்​ப​தை​யும், தகு​தி​யற்ற வாக்​காளர்​களை நீக்​கு​வதை​யும் முக்​கிய நோக்​க​மாகக் கொண்டு கடந்த ஜூன் 24-ம் தேதி சிறப்பு தீவிர திருத்த பணி​களை தேர்​தல் ஆணை​யம் தொடங்​கியது. அதன்​படி, பிஹாரில் 2003-ம் ஆண்​டுக்கு பிறகு வாக்​காள​ராக பதிவு செய்து கொண்​ட​வர்​கள் தாங்​கள் இந்​தி​யாவை சேர்ந்​தவர்​கள் என்​பதை நிரூபிப்​ப​தற்கு பிறப்​புச் சான்​றிதழ், பாஸ்​போர்ட் போன்ற கூடு​தல் ஆவணங்​களை சமர்ப்​பிக்க வேண்​டிய கட்​டா​யம் ஏற்​பட்​டுள்​ளது.

தேர்​தல் ஆணை​யத்​தின் இந்த முடிவுக்கு காங்​கிரஸ் தலை​மையி​லான இண்​டியா கூட்​டணி கடும் எதிர்ப்பு தெரி​வித்து வரு​கிறது. தேர்​தல் ஆணை​யத்​துக்கு எதி​ராக உச்ச நீதிமன்றத்​தில் பல்​வேறு தரப்​பினர் மனு ​தாக்​கல் செய்​துள்​ளனர். இந்த மனுக்​கள் உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் சுதான்சு துலி​யா, ஜோய் மல்யா பாக்சி ஆகியோர் அடங்​கிய அமர்வு முன்பு இன்று விசா​ரணைக்கு வந்​தது. மனு​தா​ரர்​கள் தரப்​பில் மூத்த வழக்கறிஞர்கள் கபில் சிபல், அபிஷேக் சிங்வி, கோபால் சங்கரநாராயணன் உள்​ளிட்​டோர் ஆஜராகினர். தேர்தல் ஆணையம் சார்பில் மூத்த வழக்கறிஞர்கள் கே.கே. வேணுகோபால், ராகேஷ் திவேதி ஆஜராகினர்.

கபில் சிபல் தனது வாதத்தில், "ஒருவர் தான் இந்தியர்தான் என்பதை நிரூபிக்க 11 ஆவணங்களில் ஒன்றைக் காண்பிக்கலாம் என தேர்தல் ஆணையம் கூறுகிறது. ஆனால், இதில் ஆதார் அடையாள அட்டை இல்லை. ஆனால், பாஸ்போர்ட் இருக்கிறது. பிஹார் மக்கள் தொகையில் 2% பேர் மட்டுமே பாஸ்போர்ட் வைத்துள்ளார்கள். ஆனால், 87% பேர் ஆதார் வைத்துள்ளார்கள். எனவே, ஆதாரை ஓர் ஆவணமாக தேர்தல் ஆணையம் சேர்க்க வேண்டும்” என வாதிட்டார்.

மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி தனது வாதத்தில், “ஆதார் என்பது சட்டப்படி அங்கீகரிக்கப்பட்ட ஓர் அடையாள ஆவணம். இதைப் பெறுவதற்கு அரசாங்கம் தொடர்ந்து பொதுமக்களுக்கு அழுத்தம் கொடுத்தது. ஆனால், முதல்முறையாக இந்த ஆவணம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. குடிமக்களைக் கண்டறிவதற்கான மறைமுகப் பயிற்சியாக இந்த நடவடிக்கை உள்ளது” என குற்றம் சாட்டினார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி சுதான்சு துலியா, "சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி என்பது சிறப்புத் திருத்தமாகத் தெரியவில்லை. மாறாக, குடியுரிமையை கேள்விக்கு உட்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட ஒரு பணியைப் போல தெரிகிறது" என குறிப்பிட்டார். “பிஹார் சட்டப்பேரவைத் தேர்தல் நெருங்கும் நிலையில், இந்தச் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி ஏன் மேற்கொள்ளப்படுகிறது?” என நீதிபதி ஜோய் மல்யா பாக்சி கேள்வி எழுப்பினார்.

இதற்கு பதில் அளித்துப் பேசிய தேர்தல் ஆணைய வழக்கறிஞர் ராகேஷ் திவேதி, "சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணியானது, உரிய நடைமுறைகளின்படி மேற்கொள்ளப்படும். அறிவிப்பு இல்லாமல், விசாரணைக்கான வாய்ப்பு இல்லாமல் யாருடைய பெயரும் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்படாது” என உறுதி அளித்தார். மேலும் அவர், “அடையாள ஆவணங்களின் பட்டியலில் 11 ஆவணங்கள் உள்ளன. இது முழுமையானது அல்ல. அதேநேரத்தில், ஆதார் என்பது அடையாள அங்கீகார ஆவணம். குடியுரிமை ஆவணம் அல்ல.

வரலாற்றில் முதல் முறையாக ஆன்லைனில் ஆவணங்கள் பதிவேற்றப்படும் நடைமுறையை நாங்கள் உருவாக்கி இருக்கிறோம். இதன்பிறகு, பெயர்களைச் சேர்ப்பது வழக்கமான நடைமுறையாகிவிடும். இந்த செயல்பாடுகளை மீண்டும் மேற்கொள்ள வேண்டிய தேவை இருக்காது. குடிமக்களாக இல்லாத, நாட்டில் வசிப்போருக்கும்கூட ஆதார் வழங்கப்படுகிறது. குடிமக்களுக்கான ஆவணம் என்று ஆதார் சட்டமும் கூறவில்லை. அதுமட்டுமல்ல, பிஹாரில் இருந்து 70 லட்சம் பேர் வெளியேறி இருக்கிறார்கள். இதன் காரணமாகவும் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி தேவையான ஒன்றாக இருக்கிறது" என தெரிவித்தார்.

மனுதாரர்கள் தரப்பில், “தேர்​தல் ஆணை​யத்​தின் இந்த திருத்​தப் பணி​யால் லட்​சக்​கணக்​கான பெயர்​கள் வாக்​காளர் பட்​டியலில் இருந்து நீக்​கப்​படும். பெண்​களும், தாழ்த்தப்பட்டோரும் மிக மோச​மாகப் பாதிக்​கப்​படு​வார்​கள்’’ என்றும் வாதிட்​டனர்.

இரு தரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், "ஆதார், வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை செல்லுபடியாகும் ஆவணமாக கருதுங்கள். 11 ஆவணங்களின் பட்டியல் முழுமையானது அல்ல என தேர்தல் ஆணைய வழக்கறிஞர் கூறியிருக்கிறார். எனவே, தேர்தல் ஆணையத்தால் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டை, ரேஷன் அட்டை ஆகியவற்றை பரிசீலியுங்கள்" எனத் தெரிவித்தனர். மேலும், இந்த வழக்கை வரும் 28-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர். மேலும், அதுவரை சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் பணிக்கு இடைக்கால தடை விதிக்கவும் மறுத்துவிட்டனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x