Published : 09 Jul 2025 06:40 PM
Last Updated : 09 Jul 2025 06:40 PM
பொதுத் துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கக் கூடாது, தொழிலாளர்களுக்கு எதிரான 4 சட்டங்களை திரும்பப் பெற வேண்டும், பொதுத் துறை நிறுவனங்களில் காலிப் பணியிடங்களை நிரப்ப வேண்டும், மத்திய - மாநில அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் கொண்டுவர வேண்டும் என்பன உள்ளிட்ட 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் இன்று (ஜூலை 9) நாடு முழுவதும் பரவலாக பாரத் பந்த் நடைபெற்றது.
10 மத்திய தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பு அழைப்பின் பேரில் நடந்த பாரத் பந்த் காரணமாக நாடு முழுவதும் பரவலாக சாலை, ரயில் மறியல்கள், கண்டனப் பேரணிகள், இருசக்கர வாகனப் பேரணிகள் நடைபெற்றன. கேரளாவில் பாரத் பந்த் தாக்கம் பரவலாக உணரப்பட்டது. அங்கே பொது, தனியார் போக்குவரத்து வாகனங்கள் பெரும்பாலும் இயங்கவில்லை. குறிப்பாக, தொலைதூரங்களுக்கு இடையேயான போக்குவரத்து முற்றிலுமாகவே இயங்கவில்லை. இதனால் நூற்றுக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டனர்.
மேற்கு வங்கத்தில் இடதுசாரிகள் மற்றும் திரிணமூல் காங்கிரஸ் தொண்டர்கள் - போலீஸார் இடையே கைகலப்பு ஏற்பட்டது. பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற மோதல் போக்கு நீடித்தது. இருப்பினும், மாநிலம் முழுவதுமே வன்முறை சம்பவங்கள் ஏதும் நடந்துவிடாமல் தவிர்க்கும் பொருட்டு கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
தேசியத் தலைநகர் டெல்லியைப் பொறுத்தவரை பந்த் தாக்கம் பெரிதாக உணரப்படவில்லை. அனைத்திந்திய வர்த்தக கூட்டமைப்பினர் ஆதரவாக ஆங்காங்கே போராட்டங்கள் நடந்த போதிலும், டெல்லியில் பெரும்பாலான கடைகள், வர்த்தக நிறுவனங்கள் வழக்கம்போலவே இயங்கின. டெல்லியின் மிகவும் பரபரப்பான கனோட் பேலஸில் வழக்கம்போல் வணிக நிறுவனங்கள் செயல்பட்டன. டெல்லியில் உள்ள பிரபலமான கான் மார்கெட் உள்பட 700 சந்தைகளும், 56 தொழிற்பேட்டைகளும் வழக்கம்போல் இன்று இயங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கர்நாடகாவில் மைசூரு நகரில் அமைந்துள்ள தொழிற்பேட்டைகளில் மட்டும் பந்த் தாக்கம் லேசாக உணரப்பட்டது. அங்கு ஏஐயுடியுசி, சிஐடியு, ஏஐகேஎம்எஸ் தொழிற்சங்கங்களை சேர்ந்தவர்கள் மாநில, மத்திய அரசுக்கு எதிராக குரல் எழுப்பி பேரணியில் ஈடுபட்டனர். பேரணியின்போது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் ஜகதீஷ் சூர்யா பேசுகையில், “இந்த பந்த் போராட்டமானது, மத்திய, மாநில அரசுகளுக்கு தொழிற்சங்கங்களின் பலத்தை வலியுறுத்தும்படி அமைந்துள்ளது” என்றார்.
தமிழகத்தில் பேருந்துகள் வழக்கம்போல் இயங்கின. கல்வி நிலைங்கள், வணிக நிறுவனங்களும் வழக்கம் போல் இயங்கின. பெரிதாக பாதிப்பு ஏதுமில்லை என்றாலும் தொழிற்சங்கத்தினர் ஆங்காங்கே சாலை மறியலில் ஈடுபட்டனர். தலைநகர் சென்னை தொடங்கி தென்மாவட்டங்கள் வரை இத்தகைய மறியல் போராட்டங்கள் நடைபெற்றன.
எழும்பூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்ஆர்எம்யு துணை பொதுச்செயலாளரும், எஸ்ஆர்எம்யு சென்னை கோட்ட தலைவருமான பால் மேக்ஸ்வெல் தலைமை வகித்து பேசினார். ஹிந்த் மஸ்தூர் சபா சார்பில், அண்ணாசாலை தபால் நிலையம் முன்பு நடைபெற்ற மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட எஸ்ஆர்எம்யூ தலைவரும் ஹிந்த் மஸ்தூர் சபா தலைவருமான ராஜா ஸ்ரீதர் பங்கேற்றார். 13 தொழிற்சங்கங்களை சேர்ந்த தலைவர்கள், தொண்டர்கள் என 1,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.
அசாமில், தேயிலை தோட்டத் தொழிலாளர்கள் பரவலாக இன்றை பந்த்தில் இணைந்து போராட்டங்களில் கலந்து கொண்டனர். அங்கு சரக்கு வாகனங்கள் பெரிதாக இயங்கவில்லை. மாநிலத்தில் போக்குவரத்துக் கழகங்கள் பரவலாக பந்த்துக்கு ஆதரவு தெரிவித்திருந்தன. பேருந்துகள், லாரிகள் ஓடவில்லை. பள்ளி வாகனங்கள், அவசரகால சேவை ஊர்திகள் இயங்க அனுமதிக்கப்பட்டன. கவுகாத்தியில் மாநகரப் பேருந்துகள், ஆப் மூலம் இயங்கும் டாக்சி சேவைகள் கூட இயங்கவில்லை.
தெலங்கானாவில் ஹைதராபாத் நகரில் தொழிற்சங்க உறுப்பினர்கள் பைக் பேரணி நடத்தொனர். நகரின் பல்வேறு பகுதிகளிலும் சிவப்புக் கொடிகளுடன் போராட்டங்கள் நடந்தன. சிஐடியு, டியுசிஐ, ஏஐயுடியுசி உறுப்பினர்கள் 1000-க்கும் மேற்பட்டோர் பாகிலிங்கம்பள்ளியில் இருந்து பேரணியாகச் சென்றனர். சிலர் பைக்கிலும் பேரணியில் இணைந்தனர். சிக்கட்பள்ளி வந்தபோது அவர்கள் தடுத்து கைது செய்யப்பட்டனர்.
53% இந்தியர்களுக்கு சமூக பாதுகாப்பு இல்லை: காங்கிரஸ் - பாரத் பந்த் ஒட்டி கர்நாடகா காங்கிரஸ் பொதுச் செயலாளர் ரன்தீப் சிங் சூர்ஜேவாலா அளித்தப் பேட்டியில், “இந்திய தொழில் சக்தியில், 53% பேருக்கு சமூகப் பாதுகாப்பு இல்லை. 80% தொழில் சக்தி அமைப்புசாராதவர்களாகவே இருக்கின்றனர். 60% தொழிலாளர்கள் எவ்வித எழுத்துபூர்வ ஒப்பந்தமும் இல்லாமல் தான் பணியாற்றுகின்றனர்.” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT