Published : 09 Jul 2025 05:31 PM
Last Updated : 09 Jul 2025 05:31 PM
பாட்னா: “வாக்குரிமையை களவாடவே வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் செயல்படுத்தப்படுகிறது. 2024-ம் ஆண்டு மகாராஷ்டிராவில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் மோசடி நடந்ததுபோல் பிஹார் சட்டப்பேரவைத் தேர்தலில் நடக்க அனுமதிக்கமாட்டோம்” என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
பிஹாரில் வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர் - special intensive revision of electoral rolls ) நடைபெறுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இண்டியா கூட்டணி சார்பில் இன்று பாட்னா தேர்தல் அலுவலகம் நோக்கி கண்டனப் பேரணி நடைபெற்றது. அதில் கலந்து கொண்டோர் மத்தியில் ராகுல் காந்தி பேசியது: “மகாராஷ்டிரா சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவுக்கு, தேசிய ஜனநாயகக் கூட்டணிக்கு ஆதரவாக மோசடிகள் நடைபெற்றன. அதையே பிஹாரிலும் நடத்த சிலர் முயற்சிக்கின்றனர். ஆனால் நாங்கள் அதை நடக்கவிடமாட்டோம். பிஹாரில் முன்னெடுக்கப்பட்டுள்ள ‘வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம்’ , மகாராஷ்டிரா தேர்தல் மோசடியின் நீட்சியே. இதன் மூலம் மக்களின் வாக்குரிமை மட்டுமல்லாது அவர்களின் எதிர்காலமும் பறிக்கப்படும்.
தேர்தல் ஆணையமானது அரசமைப்பை பாதுகாக்க வேண்டும். ஆனால் அது, பாஜகவின் உத்தரவுகளுக்கு இணங்கி இயங்கிக் கொண்டிருக்கிறது. தேர்தல் ஆணையர்கள் பாஜகவால் நியமிக்கப்படுகிறார்கள். ஒரு தேர்தலையே களவாடி விழுங்கிவிடவே இந்த தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தம் நடத்தப்படுகிறது. அவ்வாறாக மக்களின் வாக்குரிமையை, இளைஞர்களின் வாக்குரிமையை தேர்தல் ஆணைய விழுங்கிவிட நாங்கள் அனுமதிக்கமாட்டோம்.
தேர்தல் ஆணையமானது இப்போதெல்லாம் பாஜக - ஆர்எஸ்எஸ்ஸின் மொழியில் பேசுகிறது. முன்பெல்லாம் தேர்தல் ஆணையர் தேர்வுக் குழுவில் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்கள் உறுப்பினர்களாக இருப்பர். ஆனால் இப்போதெல்லாம் நாங்கள் நேரடியாக அதில் ஈடுபடுவதில் இருந்து விலக்கி வைக்கப்பட்டுள்ளோம். பாஜக நியமிக்கும் தேர்தல் ஆணையர்கள் பெயர் கொண்ட பட்டியல் மட்டுமே எங்களுக்கு வழங்கப்படுகிறது.
மகாராஷ்டிரா தேர்தலில் போலி வாக்காளர்கள் பெயர்கள் சேர்க்கப்பட்ட விவகாரத்தை நாங்கள் ஏற்கெனவே அம்பலப்படுத்தியிருக்கிறோம். ஒரே வீட்டு முகவரியில் ஓராயிம் வாக்காளர்கள் இருந்ததை அம்பலப்படுத்தினோம். இதைப் பற்றி நாங்கள் உரிய விவரங்களைத் தருமாறு கேட்டபோது தேர்தல் ஆணையமோ பாஜக - ஆர்எஸ்எஸ் மொழியில் பேச ஆரம்பித்துவிட்டது. அவர்கள், மக்கள் சேவைக்காகவே உள்ளனர், பாஜக சேவைக்காக அல்ல என்பதை உணர வேண்டும்.
மகாராஷ்டிரா பாணியை மற்ற எல்லா இடங்களிலும் அமல்படுத்த விரும்புகின்றனர். வாக்காளர்கள் பெயர்களை நீக்க முயற்சிக்கின்றனர். ஆனால், இது பிஹார். இங்குள்ள மக்கள் பாஜகவின் இந்த முயற்சியின் பின்னால் இருக்கும் சதியை அறிவார்கள்” என்றார்.
பாட்னா பேரணிக்காக பிஹார் வந்த ராகுல் காந்தியுடன் கூட்டணிக் கட்சித் தலைவர்களான தேஜஸ்வி யாதவ் (ஆர்ஜேடி), டி.ராஜா (சிபிஐ). எம்.ஏ.பேபி (சிபிஎம்) மற்றும் தீபாங்கர் பட்டாச்சார்யா, (சிபிஐ எம்எல்) ஆகியோர் இருந்தனர். தேர்தல் ஆணையத்துக்கு எதிரான போராட்டத்தோடு, இன்று நடைபெறும் பாரத் பந்த்துக்கும் ராகுல் ஆதரவு தெரிவித்தார்.
‘சார்’- (SIR) க்கு ஆதரவும், எதிர்ப்பும் - வாக்காளர் பட்டியலில் சிறப்புத் தீவிர திருத்தம் (எஸ்ஐஆர் - SIR - special intensive revision of electoral rolls ) மூலம் வங்கதேசம், மியான்மரில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறியவர்களை அடையாளம் கண்டு அவர்களை வாக்காளர்களாகக் கொண்டு நடக்கும் வாக்கு வங்கி அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைப்போம் என்று பாஜக கூறுகிறது. ஆனால், இந்த SIR-க்கு எதிர்ப்பு தெரிவிக்கும் காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள், சட்டப்பேரவைத் தேர்தலுக்கு குறுகிய காலம் மட்டுமே இருக்கும் சூழலில். இவ்வாறாக சிறப்புத் தீவிர திருத்தம் செய்வது தவறுதலாக தகுதியான வாக்காளர்களை நீக்குவதையே நிகழ்த்தும். இது பாஜகவுக்கு சாதகமான செயல்பாடு என்று விமர்சிக்கின்றன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT