Published : 08 Jul 2025 07:37 AM
Last Updated : 08 Jul 2025 07:37 AM
சிம்லா: இமாச்சல பிரதேச மாநிலத்தில் கடந்த 2 வாரங்களாக கனமழை பெய்து வருகிறது. மேலும், கடந்த மாதம் 20-ம் தேதி முதல் 19 முறை மேகவெடிப்பு மழை அங்கு பதிவாகியுள்ளது. இந்நிலையில் மண்டி மாவட்டம் துனாக் கிராமத்திலுள்ள இமாச்சல பிரதேச மாநில கூட்டுறவு வங்கிக் கிளையானது மழை நீரில் மூழ்கியுள்ளது. மேலும் சகதி, குப்பை ஆகியவை வங்கிக் கிளை முழுவதும் தேங்கிக் கிடக்கிறது.
இதனால் கிளையில் டெபாசிட் செய்யப்பட்டிருந்த கோடிக்கணக்கான மதிப்புள்ள நகைகள், ரொக்கத்தின் நிலை என்னவென்று தெரியவில்லை. 2 மாடிகள் கொண்ட இந்தக் கட்டிடத்தின் முதல் மாடி வரை தண்ணீர் தேங்கி நிற்கிறது. மழை வெள்ளத்தின் காரணமாக வங்கிக் கிளையின் முகப்பிலிருந்து ஷட்டர் அடித்துச் செல்லப்பட்டு விட்டது.
இதனால் வங்கிக் கிளையின் உள்ளே தண்ணீர் புகுந்து வங்கி முழுவதும் நீர் நிரம்பிவிட்டது. கூடுதல் வெள்ள நீர் பெருக்கெடுத்து வந்ததால் மீதியிருந்த 2 ஷட்டர்களும் அடித்துச் செல்லப்பட்டன. இதனால் வங்கியில் எவ்வளவு சேதம் ஏற்பட்டது என்று இதுவரை தெரியவில்லை.
இதுகுறித்து வங்கியில் கணக்கு வைத்திருக்கும் உள்ளூர் வியாபாரி ஹரி மோகன் என்பவர் கூறும்போது, “இந்த வங்கிக் கிளையில் 150-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் கணக்கு வைத்துள்ளோம். மேலும் ஆயிரக்கணக்கான பொதுமக்களும் கணக்கு வைத்துள்ளனர். இவர்கள் அனைவருமே தினசரி பணத்தை டெபாசிட் செய்தும், பணத்தை எடுத்தும் வருகிறோம்.
துனாக் டவுன் பகுதியில் வசிக்கும் 8 ஆயிரத்துக்கு மேற்பட்ட மக்கள், இந்த ஒரேயொரு வங்கிக்கிளையைத்தான் நம்பியுள்ளனர். மழை வெள்ளத்தின் காரணமாக வங்கியில் இருந்த ரொக்கமும், நகைகளும் என்னவாயின என்பது குறித்து கவலையாக உள்ளது” என்றார்.
இமாச்சலில் பெய்து வரும் கனமழைக்கு இதுவரை 78 பேர் உயிரிழந்துள்ளனர். ஜூன் 20-ம் தேதி முதல் ஜூலை 6-ம் தேதி வரை இங்கு 23 முறை ஃபிளாஷ் ஃபிளட்ஸ் எனப்படும் வெள்ளப்பெருக்கும், 19 முறை மேகவெடிப்பு மழையும், 16 முறை நிலச்சரிவும் ஏற்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT