Last Updated : 07 Jul, 2025 07:11 PM

4  

Published : 07 Jul 2025 07:11 PM
Last Updated : 07 Jul 2025 07:11 PM

“அரசிடம் இருந்து இந்துக்களைவிட அதிக பலன் பெறுவது சிறுபான்மையினரே” - கிரண் ரிஜிஜு

புதுடெல்லி: பெரும்பான்மை சமூகமான இந்துக்களைக் காட்டிலும் சிறுபான்மை சமூகங்கள்தான் அரசிடம் இருந்து அதிக நிதியையும் ஆதரவையும் பெறுவதாக மத்திய சிறுபான்மை விவகாரத் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

இது குறித்து ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள அவர், "கடந்த 11 ஆண்டுகளில், பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையிலான அரசு, அனைவரின் ஆதரவுடன், அனைவரின் நம்பிக்கையுடன், அனைவரின் முயற்சிகளுடன் அனைவரின் வளர்ச்சியையும் உறுதிப்படுத்துவது என்ற கொள்கையை முன்னெடுத்து வருகிறது. இந்தக் கொள்கையைப் பின்பற்றி, சிறுபான்மை விவகார அமைச்சகம் கல்வி, திறன் மேம்பாடு, தொழில்முனைவு உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்துகிறது. இதனால், சிறுபான்மை சமூகங்கள் நாட்டின் வளர்ச்சியுடன் இணைந்து சுறுசுறுப்பான, சமமான பங்கேற்பாளர்களாக இருக்கிறார்கள்.

நாம் புரிந்துகொள்ள வேண்டிய முக்கிய விஷயம் என்னவென்றால், பெரும்பான்மை சமூகமான இந்துக்களைக் காட்டிலும் சிறுபான்மை சமூகங்கள் அரசிடம் இருந்து அதிக நிதியையும் ஆதரவையும் பெறுகின்றன. இந்துக்களுக்கு என்ன கிடைக்கிறதோ, அது சிறுபான்மையினருக்கும் கிடைக்கிறது. ஆனால், சிறுபான்மையினருக்கு என்ன கிடைக்கிறதோ, அவை இந்துக்களுக்குக் கிடைப்பதில்லை.

கடந்த 10 ஆண்டுகளில் உதவித்தொகைகளின் ஒட்டுமொத்த விநியோகம் 172% அதிகரித்துள்ளது. பெண் பயனாளிகளின் எண்ணிக்கை 182% அதிகரித்துள்ளது. அமைச்சகத்தின் முதன்மைத் திட்டமான பிஎம் விகாஸ் குறிப்பிடத்தக்க வகையில் சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. கடந்த 11 ஆண்டுகளில் 9.25 லட்சத்துக்கும் அதிகமான நபர்கள் பயிற்சி பெற்று அதிகாரம் பெற்றுள்ளனர்.

சிறுபான்மையினருக்கான வேலைவாய்ப்பு கட்டமைப்பு என்பது கடந்த 2014-இல் பூஜ்ஜியமாக இருந்தது. கடந்த 10 ஆண்டுகளில், 10 லட்சத்துக்கும் மேற்பட்ட இளைஞர்கள் மற்றும் இளம்பெண்களின் திறன்களை மேம்படுத்தி அவர்களுக்கு வாய்ப்புகள் கிடைப்பதை உறுதிப்படுத்தி உள்ளோம்.

கடந்த 10 ஆண்டுகளில் ஹஜ் திட்டமும் மிகப் பெரிய அளவில் மாறி இருக்கிறது. ஹஜ் செல்பவர்கள் சவுதி அரேபியாவில் உடல் நிலை பாதிக்கப்படுவதும், உயிர் இழப்பதும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு குறைந்துள்ளது. அமைச்சகத்துக்கு இது ஒரு பெரிய சாதனை. இந்தியாவுக்கான ஹஜ் ஒதுக்கீடு 2014ல் 1.36 லட்சமாக இருந்தது. அது தற்போது 1.75 லட்சமாக அதிகரித்துள்ளது.

ஜனநாயகப்பூர்வமான முறையில் வக்பு திருத்தச் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த சட்டத்தை விவாதிக்க நாடாளுமன்றத்தின் கூட்டுக் குழு 113 மணி நேரத்திற்கும் மேலாக 38 முறை கூடியது. 49 முக்கிய முஸ்லிம் அமைப்புகள், 5 சிறுபான்மை ஆணையங்கள் உட்பட 184 பங்குதாரர்களுடன் இந்தக் குழு கூட்டப்பட்டது. மின்னஞ்சல் மூலம் 97 லட்சத்துக்கும் மேற்பட்ட பரிந்துரைகளைப் பெற்றது. சமூக நலன் சார்ந்த முக்கியமான விஷயங்களில், அரசாங்கம் உரையாடல், பங்கேற்பு மற்றும் ஒருமித்த கருத்தை மதிக்கிறது என்பதை இது காட்டுகிறது.

இந்த சீர்திருத்தத்தின் நோக்கம் வக்பு சொத்துகளை கட்டுப்படுத்துவது அல்ல. மாறாக, வக்பு வாரியங்களுக்கு டிஜிட்டல் முறையில் அதிகாரம் அளித்து, அதன் மூலம் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளையும், வக்பு நிலம் தவறாகப் பயன்படுத்தப்படுவதையும் தவிர்க்க உதவுவதே. மேலும், வக்பு சொத்துக்களிலிருந்து கிடைக்கும் வருவாய் வக்பு நன்கொடையாளர்களின் விருப்பப்படி திறமையாகப் பயன்படுத்தப்படுவதை உறுதி செய்வதே. இந்த சீர்திருத்தத்தின் உண்மையான பயனாளிகள் சாதாரண முஸ்லிம்களாக இருப்பார்கள்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x