Published : 04 Jul 2025 07:59 PM
Last Updated : 04 Jul 2025 07:59 PM
சிம்லா: இமாச்சலப் பிரதேசத்தில் தொடர் கனமழை, மேக வெடிப்பு மற்றும் வெள்ளத்தால் 69 பேர் உயிரிழந்ததாகவும், ரூ.700 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் அம்மாநில முதல்வர் சுக்விந்தர் சிங் சுகு தெரிவித்தார். மேலும், மாநிலம் ‘போர் போன்ற இயற்கைப் பேரிடரை’ எதிர்த்து போராடுவதாகவும் அவர் கூறினார்.
மழை, வெள்ள பாதிப்புகள் குறித்து சட்டமன்ற துணை சபாநாயகர் மற்றும் அமைச்சர்களுடனான உயர்மட்ட ஆய்வுக் கூட்டத்துக்குப் பிறகு சிம்லாவில் செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் சுக்விந்தர் சிங், “தற்போதைய இயற்கைப் பேரிடரால் பாதிக்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்கியுள்ள குடும்பங்களுக்கு இமாச்சலப் பிரதேச அரசு மாதத்துக்கு ரூ.5,000 வழங்கும் என்று முடிவு செய்துள்ளோம். மேலும், பாதிக்கப்பட்ட அனைத்து குடும்பங்களுக்கும் உணவு மற்றும் ரேஷன் விநியோகத்தையும் அரசு உறுதி செய்யும்.
இதுவரை 69 பேர் உயிரிழந்துள்ளனர், 37 பேர் காணாமல் போயுள்ளனர். 110 பேர் காயமடைந்துள்ளனர். மொத்த சேதம் சுமார் 700 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தில் இப்போது சுமார் 300 சாலைகள் மூடப்பட்டுள்ளன, 790 நீர் வழங்கல் திட்டங்கள் சேதமடைந்துள்ளன, மேலும் 332 மின்மாற்றிகள் பாதிக்கப்பட்டுள்ளன. பருவ மழைக்காலத்தின் தொடக்கத்திலேயே ஏற்பட்ட இவ்வளவு பெரிய பேரழிவு முன்னெப்போதும் சந்திக்காதது ஆகும்" என அவர் கூறினார்.
தொடர்ந்து பேசிய அவர், “கடந்த 15 நாட்களில், சுமார் 14 மேக வெடிப்புகள் இமாச்சலில் ஏற்பட்டுள்ளது. இதுபோன்ற மேக வெடிப்புகள் அடிக்கடி ஏன் நிகழ்கின்றன என்பதை நாங்கள் தற்போது ஆய்வு செய்து வருகிறோம். இதை மத்திய உள்துறை அமைச்சரின் கவனத்துக்கும் கொண்டு சென்றுள்ளேன். இன்று நான் நாட்டின் உள்துறை அமைச்சர் அமித் ஷாவிடம் பேசினேன். அவர் மத்திய அரசு எங்களுடன் இருப்பதாக உறுதியளித்தார். இந்தப் பேரிடரை ஒரு போர் போல எதிர்த்துப் போராடுகிறோம். நிவாரணப் பொருட்கள் முடிந்தவரை போர்ட்டர்கள் மூலம் அனுப்பப்படுகின்றன. வானிலை சரியாகியவுடன், உதவி வழங்க ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும். மாநிலத்தில் சேதத்தை மதிப்பிடுவதற்கு ஒரு மத்திய குழுவும் வருகிறது.
இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தால் பணி வழங்கப்பட்ட ஒப்பந்ததாரர்கள் மலைகளுக்கு பெரிய இயந்திரங்களைக் கொண்டு வருகிறார்கள். 60 முதல் 70 ஆண்டுகளாக, நாங்கள் பாரம்பரிய அறிவைப் பயன்படுத்தி இமாச்சலப் பிரதேசத்தில் சாலைகளை அமைத்து வருகிறோம். நிலப்பரப்பு பற்றி தெரியாதவர்களுக்கு இதுபோன்ற ஒப்பந்தங்களை வழங்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொள்கிறேன். சாலைகள் அமைக்க பாறைகளை வெட்டிய பிறகு சரிவுகளை எவ்வாறு நிலைப்படுத்துவது என்பதைப் புரிந்த உள்ளூர்வாசிகளுக்கு ஒப்பந்தங்களை வழங்குங்கள். இந்த அறிவியல் பூர்வமற்ற சாலை அமைப்பால் மழையின்போது பெரிய அளவிலான சேதம் ஏற்படுகிறது” என்று அவர் கூறினார்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT