Published : 04 Jul 2025 05:29 PM
Last Updated : 04 Jul 2025 05:29 PM
மும்பை: மராத்தி பேச மறுத்து வாக்குவாதம் செய்த உணவக உரிமையாளர் தாக்கப்பட்ட சம்பவத்துக்காக ராஜ் தாக்கரேவின் நவநிர்மாண் சேனாவை மகாராஷ்டிர பாஜக அமைச்சர் நிதேஷ் ரானே கடுமையாக விமர்சித்துள்ளார். மேலும், ‘முஸ்லிம்களை மராத்தி பேச சொல்ல அவர்களுக்கு தைரியம் இருக்கிறதா?’ என்று அவர் கேள்வி எழுப்பினார்.
இதுகுறித்து பேசிய அமைச்சர் நிதேஷ் ரானே, “தாடி வைத்தவர்கள், குல்லா போட்டவர்கள் மராத்தி பேசுவார்களா? அவர்கள் தூய மராத்தி பேசுவார்களா? நவநிர்மாண் சேனாவுக்கு அந்த மக்களை அடிக்க தைரியம் இல்லை. ஜாவேத் அக்தர் மற்றும் ஆமிர் கான் மராத்தி பேசுவார்களா? அக்தர், ஆமிர் கானை மராத்தி பேச வைக்க அவர்களுக்கு தைரியம் இல்லை. ஏழை இந்துக்களை மட்டும் தாக்க உங்களுக்கு எப்படி தைரியம் வருகிறது. இந்த அரசாங்கம் இந்துக்களால் உருவாக்கப்பட்டது, இந்துத்துவா மனநிலையைக் கொண்டுள்ளது. எனவே, யாராவது இந்துக்களை தாக்க முயன்றால், எங்கள் அரசாங்கத்தின் மூன்றாவது கண் விழித்துக்கொள்ளும்" என்று கூறினார்.
முன்னதாக, தானேவின் பயந்தர் பகுதியில் உணவக உரிமையாளர் ஒருவர் இந்தியில் பேச மறுத்து வாக்குவாதம் செய்ததால், அவரை சிலர் தாக்கிய வீடியோ காட்சிகள் வைரலாகி பெரும் சலசலப்பை உருவாக்கியது. மகாராஷ்டிரா நவநிர்மான் சேனாவை சேர்ந்த நபர்கள், அவரை தாக்கியதாக சொல்லப்படுகிறது.
இது தொடர்பாக 7 நவநிர்மாண் சேனா கட்சியினர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். நவ நிர்மாண் சேனா கட்சியினர் சமீபத்தில் மகாராஷ்டிராவில் மராத்தி மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என பல வகைகளில் முன்னெடுப்புகளை நடத்தி வருகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT