Published : 04 Jul 2025 06:32 AM
Last Updated : 04 Jul 2025 06:32 AM
பெங்களூரு: கர்நாடக மாநிலத்தில் கடந்த ஓரிரு ஆண்டுகளாக 30 வயதுக்கும் குறைவான இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. மது மற்றும் சிகரெட் பழக்கம், இணை நோய் அறிகுறிகள் உள்ளிட்டவை இல்லாத போதும், திடீர் மாரடைப்பு ஏற்படுவது அதிகரித்து வருவதாக சுகாதாரத்துறை ஆய்வுகள் கூறுகின்றன. ஹாசன் மாவட்டத்தில் கடந்த 40 நாட்களில் 23 இளைஞர்கள் மாரடைப்பால் உயிரிழந்துள்ளனர். இதில் 18 பேருக்கு வீட்டிலேயே உயிர் பிரிந்துள்ளது.
இந்நிலையில் கர்நாடக முதல்வர் சித்தராமையா, ‘‘இளம்வயது மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. பெங்களூர் மற்றும் மைசூருவில் உள்ள ஜெயதேவா இதய நோய் மருத்துவமனைகளில் அவசர இதயச் சிகிச்சைக்காக வருபவர்களின் எண்ணிக்கை 20 சதவீதம் அதிகரித்துள்ளது.
மாரடைப்பு மரணங்கள் அதிகரிப்பதற்கு என்ன காரணம் என்பதை கண்டறிய வேண்டும். இதுகுறித்து முறையாக விசாரித்து, ஆய்வறிக்கை சமர்ப்பிக்குமாறு ஜெயதேவா இதய நோய் ஆய்வு மையத்துக்கு உத்தரவிட்டுள்ளேன்.
கரோனா தடுப்பூசி காரணமாக இந்த மரணங்கள் நிகழ்ந்ததாக பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் அச்சம் தெரிவித்துள்ளனர். தடுப்பூசிக்குப் பிந்தைய விளைவுகள் மற்றும் இளைஞர்களின் மரணங்கள் குறித்து ஆய்வு செய்யுமாறு நிபுணர் குழுவுக்கு ஏற்கெனவே உத்தரவிட்டிருந்தோம். இந்த இரு அறிக்கைகளும் இன்னும் 10 நாட்களுக்குள் கிடைத்துவிடும். பின்னர், உரிய நடவடிக்கை எடுக்கப்படும்''என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT