Last Updated : 03 Jul, 2025 03:28 PM

2  

Published : 03 Jul 2025 03:28 PM
Last Updated : 03 Jul 2025 03:28 PM

தலாய் லாமா தவிர வேறு யாரும் அடுத்த புத்த மதத் தலைவரை தீர்மானிக்க முடியாது: சீனாவுக்கு இந்தியா பதிலடி

புதுடெல்லி: “அடுத்த தலாய் லாமா குறித்த முடிவை எடுக்கும் உரிமை என்பது தற்போதைய புத்த மதத் தலைவரான தலாய் லாமா மற்றும் தலாய் லாமாவின் ‘காடன் போட்ராங் அறக்கட்டளை’ தவிர்த்து வேறு யாருக்கும் இல்லை” என்று சீனாவுக்கு இந்தியா பதிலடி கொடுத்துள்ளது.

இது குறித்து சிறுபான்மை விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு இன்று செய்தியாளர்களிடம் கூறும்போது, “அடுத்த தலாய் லாமா யார் என்பதை முடிவு செய்யும் விவகாரத்தைப் பொறுத்தவரை, அதற்காக நிறுவப்பட்டுள்ள அமைப்பு மற்றும் தலாய் லாமாவின் விருப்பம் ஆகியவற்றின்படியே தீர்மானிக்கப்பட வேண்டும் என்றே தலாய் லாமாவைப் பின்பற்றும் அனைவரும் நினைக்கிறார்கள். தலாய் லாமாவையும், நடைமுறையில் உள்ள மரபுகளையும் தவிர வேறு யாருக்கும் அதைத் தீர்மானிக்கும் உரிமை இல்லை” என்று தெரிவித்துள்ளார்.

தலாய் லாமா அறிவிப்பும், சீனா தலையீடும்: இந்தியாவில் தஞ்சமடைந்து தரம்சாலாவில் வாழ்ந்து வரும் 14-வது தலாய் லாமா தனது 90-வது பிறந்தநாளையொட்டி வெளியிட்ட அறிவிப்பில், 600 ஆண்டுகள் பழமையான தனது அறக்கட்டளை (காடன் போட்ராங் அறக்கட்டளை) தனது மறைவுக்குப் பிறகும் தொடரும் என்றும், உரிய நடைமுறைகளின்படி, திபெத்திய புத்த மதத்தினருக்குத் தலைமை தாங்கும் அடுத்த தலாய் லாமா தேர்ந்தெடுக்கப்படுவார் என்றும் உறுதி செய்தார்.

ஆனால், புத்த மதத் தலைவரான தலாய் லாமாவின் ‘வாரிசு’ குறித்து இந்த அறிவிப்பில் சீன அரசு முரண்பட்டுள்ளதுடன், புதிய தலாய் லாமாவை தேர்வு செய்வதில் தலையிடும் முனைப்பில் இருக்கிறது. இது குறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் மாவோ நிங் கூறும்போது, “தலாய் லாமா உள்ளிட்ட பவுத்த தலைவர்களை தேர்ந்தெடுக்கும் நடைமுறைகளுக்கு சீன அரசின் ஒப்புதலும் அங்கீகாரமும் அவசியம். அதற்கான நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டும்” என்று கூறியிருந்தார்.

இந்தப் பின்னணியில்தான், 14-வது தலாய் லாமாவின் ‘வாரிசு’ குறித்த அறிவிப்புக்கு ஆதரவாக மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சரும், பவுத்தருமான கிரண் ரிஜிஜு கருத்து தெரிவித்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாகப் பார்க்கப்படுகிறது.

அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற 14-வது தலாய் லாமாவின் 90-வது பிறந்த தின விழா வரும் 6-ம் தேதி தர்மசாலாவில் நடைபெற உள்ளது. இந்த பிறந்தநாள் நிகழ்வில், மத்திய அரசு சார்பில் கிரண் ரிஜிஜுவும், ராஜீவ் ரஞ்சன் சிங்கும் கலந்து கொள்ள இருக்கிறார்கள் என்பதும் கவனிக்கத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x