Published : 03 Jul 2025 07:29 AM
Last Updated : 03 Jul 2025 07:29 AM
புதுடெல்லி: வட மாநிலங்களில் ஜுலை 11-ம் தேதி முதல் ஸ்ரவண மாதம் தொடங்குகிறது. அன்று முதல் ஜுலை 24 வரை 13 நாட்களுக்கு சிவபக்தர்கள் காவடி எடுத்து சிவன் கோயில்களுக்கு பாத யாத்திரை செல்வது வழக்கம். அதன்படி உ.பி.யில் புனித யாத்திரை செல்லும் சாலைகளில் உள்ள கடைகளை இந்து அல்லாதவர்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், கடை உரிமையாளரின் பெயர், கைப்பேசி எண் போன்றவற்றை கடைக்கு முன்னர் எழுதி வைக்க வேண்டும், யாத்திரை செல்லும் பாதைகளில் இறைச்சிக் கடைகள் வைக்க கூடாது என்று உ.பி. முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார். யாத்திரைக்கு கடந்த ஆண்டும் இதேபோல் கட்டுப்பாடு விதிக்கப்பட்டது.
காவடி யாத்திரை செல்லும் பாதைகளில் இதுபோன்ற கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என்று கடந்த 2023-ம் ஆண்டே யஷ்வீர் மஹராஜ் என்ற துறவி கோரிக்கை விடுத்திருந்தார். இவர் ‘‘யோகா சாதனா’’ என்ற ஆசிரமத்தை முசாபர்நகரில் நடத்தி வருகிறார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்னர் டெல்லி - டேராடூன் நெடுஞ்சாலையில் உள்ள பண்டிட் வைஷ்னோவ் தாபாவில் யோகா சாதனாவை சேர்ந்த சீடர்கள் சோதனை நடத்தினர். ஆதார் அட்டையின்படி ஒரு கடையின் உரிமையாளர் பெயர் முஸ்லிம் என்று தெரிய வந்துள்ளது. அதன்பின்னர் ஊழியர்களின் கீழாடையை அவிழ்த்து சீடர்கள் பார்த்துள்ளனர்.
இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலானது. இதையடுத்து யாஷ்வீர் மஹராஜின் 6 சீடர்களிடம் விளக்கம் கேட்டு முசாபர்நகர் புதுமண்டி போலீஸார் நோட்டீஸ் அனுப்பி உள்ளனர்.
இதுகுறித்து யஷ்வீர் மஹராஜ் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘‘போலீஸாரின் நோட்டிஸுக்கு சீடர்கள் விளக்கம் அளிப்பார்கள். அவர்கள் மீது வழக்கு தொடுக்க முயன்றால் கடுமையாக எதிர்ப்போம். காவடி சுமக்கும் பக்தர்கள் வாங்கும் உணவில் எச்சில் துப்பியதால்தான் இந்த நடவடிக்கை. போலீஸ் நோட்டிஸுக்கு அஞ்ச மாட்டோம்’’ என்று தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய இறைத் தூதர் நபிகள் பற்றி 2015-ம் ஆண்டு விமர்சனம் செய்ததால் யஷ்வீர் பிரபலமானார். இதுதொடர்பான வழக்கில் அவர் ஏழரை மாதம் சிறை தண்டனை அனுபவித்தார். அப்போது இருந்த சமாஜ்வாதி ஆட்சியில் யஷ்வீர் மீது தேசிய பாதுகாப்பு சட்டமும் போடப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT