Last Updated : 03 Jul, 2025 07:13 AM

1  

Published : 03 Jul 2025 07:13 AM
Last Updated : 03 Jul 2025 07:13 AM

சித்தராமையாவுக்கு எதிராக காங்கிரஸ் எம்எல்ஏக்கள் போர்க்கொடி: டி.கே.சிவகுமாருக்கு ஆதரவாக மேலிடத் தலைவரிடம் புகார்

பெங்களூரு: கர்​நாட​கா​வில் முதல்​வர் சித்​த​ராமை​யாவை மாற்​றக் கோரி காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​கள் 100-க்​கும் மேற்​பட்​டோர் அக்கட்​சி​யின் மேலிடத் தலை​வரிடம் புகார் அளித்​த​தால் சர்ச்சை ஏற்​பட்​டுள்​ளது. கர்​நாட​கா​வில் கடந்த 2023-ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்​தலில் காங்​கிரஸ் அமோக வெற்றி பெற்​றது.

இதைத்​தொடர்ந்து முதல்​வர் பதவியை கைப்​பற்​று​வ​தில் சித்​த​ராமை​யா, டி.கே.சிவகு​மார் இடையே கடும் போட்டி ஏற்​பட்​டது. நீண்ட இழுபறிக்கு பின் சித்​த​ராமை​யா​வுக்கு முதல்​வர் பதவி​யும், டி.கே. சிவகு​மாருக்கு துணை முதல்​வர் பதவி​யும் வழங்கப்பட்டது. அப்​போது இரு​வருக்கும் தலா இரண்​டரை ஆண்​டு​கள் முதல்​வர் பதவி வழங்​கு​வ​தாக அதி​காரப் பகிர்வு ஒப்​பந்​தம் போடப்​பட்​ட​தாக கூறப்​படு​கிறது.

சித்​த​ராமையா முதல்​வ​ராகி 2 ஆண்​டு​கள் நிறைவடைந்த நிலை​யில், டி.கே.சிவகு​மாரை முதல்​வ​ராக நியமிக்க வேண்​டும் என அவரது ஆதர​வாளர்​கள் கூறிவரு​கின்​றனர். சித்​த​ராமை​யாவை முதல்​வர் பதவி​யில் இருந்து மாற்ற வேண்​டும் என காங்​கிரஸ் மேலிடத்​துக்​கும் கடிதம் எழு​தி​யுள்​ளனர்.

இந்​நிலை​யில் காங்​கிரஸ் எம்​எல்ஏ இக்​பால் ஹுசேன், “சித்​த​ராமை​யா​வின் ஆட்​சி​யில் ஊழல், சட்​டம் ஒழுங்கு மோச​மாகி விட்​டது. அவருக்கு முன்பு போல அதி​காரம் இல்​லை. ஆட்​சியை வேறு ஒரு​வரிடம் ஒப்​படைக்க வேண்​டும்” என வெளிப்​படை​யாக விமர்சித்தார். இதற்கு அமைச்​சர் ராஜண்​ணா, “இக்​பால் ஹுசேன் எம்​எல்ஏ கூறியது உண்மைதான். மக்​கள் மாற்​றத்தை விரும்​பு​கிறார்​கள்​''என்றார்.

கருத்து கேட்பு: இதையடுத்து கர்​நாடக அரசி​யல் நில​வரம் குறித்து காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​களிடம் கருத்து கேட்க அக்​கட்​சி​யின் மேலிடம், பொதுச்​செய​லா​ளர் ரந்​தீப் சுர்​ஜே​வாலாவை பெங்​களூரு​வுக்கு அனுப்​பியது. அவர் கடந்த 2 நாட்​களாக பெங்​களூரு​வில் 100-க்​கும் மேற்​பட்ட காங்​கிரஸ் எம்​எல்​ஏக்​களிடம் தனித்​தனி​யாக‌ ஆலோ​சனை நடத்தினார்.

அப்​போது பெரும்​பாலானோர் சித்​த​ராமை​யாவை முதல்​வர் பதவி​யில் இருந்து மாற்ற வேண்​டும். டி.கே.சிவகு​மாரை முதல்​வ​ராக நியமிக்க வேண்​டும் என வலி​யுறுத்​தி​ய​தாக தெரி​கிறது.

இதுகுறித்து காங்​கிரஸ் எம்​எல்ஏ இக்​பால் ஹுசேன் கூறுகை​யில், “100-க்​கும் மேற்​பட்ட எம்​எல்​ஏக்​கள் சித்​த​ராமை​யா​வுக்கு எதி​ராக மேலிடத் தலை​வரிடம் கூறியது உண்மைதான். அவரை மாற்​றா​விடில் கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் ஆட்​சியை இழக்​கும் என நான் கூறினேன். ஓரிரு மாதங்​களில் நிச்​ச​யம் மாற்​றம் வரும்” என்​றார். இதனால்​ கர்​நாடக அரசி​யலில்​ பரபரப்​பு ஏற்​பட்​டது.

5 ஆண்டும் நானே முதல்வர்: முதல்வர் சித்தராமையா கூறுகையில், ‘‘எனக்கும் டி.கே. சிவகுமாருக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. நாங்கள் ஒற்றுமையாக இருக்கிறோம். 5 ஆண்டுகள் முழுமையாக நானே முதல்வராக இருப்பேன். முதல்வர் இருக்கை காலியாக இல்லாத போது, அடுத்த முதல்வர் பற்றி பேசுவது சரியாக இருக்காது’’ என பதிலளித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x