Last Updated : 02 Jul, 2025 04:59 PM

 

Published : 02 Jul 2025 04:59 PM
Last Updated : 02 Jul 2025 04:59 PM

அசாமில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலுக்கு இதுவரை 10 பேர் உயிரிழப்பு; 44 பேர் பாதிப்பு

கவுகாத்தி: அசாம் மாநிலம் கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் (GMCH) சமீபத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதித்தோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. 2025-ம் ஆண்டில் இதுவரை, இந்த மருத்துவமனையில் 44 பேர் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர், 10 பேர் உயிரிழந்துள்ளனர்.

இது குறித்து பேசிய கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் தலைமை கண்காணிப்பாளர் டாக்டர் அச்சுத் சந்திர பைஷ்யா, “கவுகாத்தி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு அதிகரித்து வருகிறது. குறிப்பாக, ஜூன் மாதத்தில், முந்தைய மாதத்துடன் ஒப்பிடும்போது பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை கணிசமாக அதிகமாகியுள்ளது. இதுவரை, எங்கள் மருத்துவமனையில் 44 பேருக்கு ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பு உறுதியாகியுள்ளது, இவர்களில் 10 பேர் உயிரிழந்தனர்.

இந்த மருத்துவமனையில் ஜப்பானிய மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட 44 பேரில் கம்ரூப் மாவட்டத்தைச் சேர்ந்த 14 பேர், நல்பாரியை சேர்ந்த 10 பேர், தர்ரங்கை சேர்ந்த 7 பேர் மற்றும் கம்ரூப் (மெட்ரோ) மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் அடங்குவர்” என்றார். மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் தரவுகளின்படி, 2015 முதல் 2024 வரையிலான காலகட்டத்தில் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் பாதிப்பால் அசாமில் 840-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜப்பானிய மூளைக்காய்ச்சல் என்றால் என்ன? - ஜப்பானிய மூளைக்காய்ச்சலை உண்டாக்கும் ஜப்பானீஸ் என்சிபிலட்டீஸ் (Japanese encephalitis - JE) வைரஸ், ‘க்யூலெக்ஸ்’ என்ற கொசுவிலும், பன்றிகளின் உடலிலும், சில பறவைகளின் உடலிலும் வாழக் கூடியது. விவசாயம் செய்கிற கிராமப் பகுதிகளில் இந்த நோய் அதிகமாக தாக்கும். ஏனெனில் க்யூலெக்ஸ் கொசுக்கள் கிணறுகள், வயல்வெளிகள், பன்றிகளின் வாழ்விடங்களிலும்தான் வாழும்.

ஜப்பானீஸ் என்சிபிலட்டீஸ் வைரஸ் தொற்று ஏற்பட்ட க்யூலெக்ஸ் கொசு கடித்தால்தான் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வரும். அதேபோல, இந்த மூளைக்காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களைக் கடித்த கொசு, ஆரோக்கியமாக இருக்கிற இன்னொருவரைக் கடித்தால் அவருக்கும் ஜப்பானிய மூளைக்காய்ச்சல் வரும். மற்றபடி, மனிதரிடம் இருந்து மற்றொரு மனிதருக்கு இந்த நோய் பரவாது என்பது குறிப்பிடத்தக்கது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x