Last Updated : 02 Jul, 2025 12:20 PM

6  

Published : 02 Jul 2025 12:20 PM
Last Updated : 02 Jul 2025 12:20 PM

5 நாடுகள் பயணத்தை தொடங்கினார் பிரதமர் மோடி: இன்று மாலை கானா அதிபருடன் பேச்சுவார்த்தை

5 நாடுகள் பயணத்தை தொடங்கிய பிரமதர் மோடி

புதுடெல்லி: ஐந்து நாடுகளுக்கான தனது பயணத்தை இன்று தொடங்கிய பிரதமர் நரேந்திர மோடி, இன்று மாலை கானா அதிபரைச் சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.

பிரிக்ஸ் மாநாட்​டில் பங்​கேற்க பிரேசில் செல்​லும் வழி​யில் கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டினா மற்​றும் நமீபியா ஆகிய நாடு​களுக்கு பிரதமர் மோடி இன்று முதல் 9-ம் தேதி வரை பயணம் மேற்​கொள்​கிறார். இதற்காக, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் பிரதமர் நரேந்திர மோடி இன்று காலை புறப்பட்டுச் சென்றார். இன்று மாலை அவர் கானா சென்றடைகிறார்.

கானா, டிரினி​டாட் & டொபாகோ, அர்​ஜென்​டி​னா, பிரேசில் மற்​றும் நமீபியா தலை​வர்​களு​டன் வர்த்​தகம், பாதுகாப்பு, எரிசக்​தி, தொழில்​நுட்​பம், வேளாண்மை மற்​றும் சுகா​தா​ரம் உட்பட பல துறை​களில் ஒத்​துழைப்​புடன் செயல்​படு​வது குறித்து பிரதமர் மோடி ஆலோ​சிக்​கிறார்.

பிரேசில், ரஷ்​யா, இந்​தி​யா, சீனா, தென்​னாப்பி​ரிக்கா உள்​ளிட்ட நாடு​களை உறுப்​பினர்​களாக கொண்ட பிரிக்ஸ் அமைப்​பின் 17-வது உச்சி மாநாடு பிரேசில் நாட்​டின் ரியோ டி ஜெனிரோ நகரில் 6, 7 ஆகிய தேதி​களில் நடை​பெறுகிறது. இந்த மாநாட்​டில் பிரதமர் நரேந்​திர மோடி பங்​கேற்​கிறார்.

டெல்லியில் இருந்து புறப்படுவதற்கு முன்பாக பிரதமர் மோடி வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவுகளில், "அடுத்த சில நாட்களில், கானா, டிரினிடாட் & டொபாகோ, அர்ஜென்டினா, பிரேசில் மற்றும் நமீபியாவில் பல்வேறு இருதரப்பு, பலதரப்பு மற்றும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள இருக்கிறேன். உலகத் தலைவர்களுடன் உரையாடி, நமது உலகை மேம்படுத்துவதற்கான வழிகளைப் பற்றி விவாதிக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இன்று மாலையில், ஆப்பிரிக்காவின் மதிப்புமிக்க நட்பு நாடும், உலகளாவிய தெற்கின் முக்கிய பங்காளியுமான கானா சென்றடைவேன். அதிபர் ஜான் டிராமணி மஹாமாவுடன் நடைபெற உள்ள பேச்சுவார்த்தை, பல்வேறு துறைகளில் இந்தியா-கானா நட்பை மேம்படுத்துவதற்கான வாய்ப்பை வழங்கும். நாளை, ஜூலை 3 ஆம் தேதி கானா நாடாளுமன்றத்தில் உரையாற்றும் வாய்ப்பைப் பெறுவது ஒரு மரியாதை.

ஜூலை 3 மற்றும் 4 ஆம் தேதிகளில், இந்தியா வரலாற்று ரீதியாகப் பிணைந்துள்ள நாடான டிரினிடாட் & டொபாகோவில் இருப்பேன். அதிபர் கிறிஸ்டின் கார்லா கங்காலூ மற்றும் பிரதமர் கம்லா பெர்சாட்-பிஸ்ஸேசர் உடனான சந்திப்புகள் நமது நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் கலாச்சார ஒத்துழைப்புக்கு உத்வேகம் அளிக்கும்.

57 ஆண்டுகளில் இந்தியப் பிரதமர் ஒருவர் மேற்கொள்ளும் முதல் இருதரப்புப் பயணமாக அர்ஜென்டினாவுக்கு எனது பயணம் இருக்கும். இந்தியாவும் அர்ஜென்டினாவும் ஜி20 அமைப்பில் இடம் பெற்றுள்ளன. மேலும், தொழில்நுட்பம் மற்றும் புதுமை போன்ற எதிர்காலத் துறைகளில் பொருளாதார தொடர்புகளை மேம்படுத்துவதற்காக இருதரப்பு ரீதியாக நெருக்கமாகச் செயல்படுகின்றன. இந்தப் பயணத்தின் போது அதிபர் ஜேவியர் மிலேயுடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தவுள்ளேன்.

பிரேசில் பயணத்தின்போது, ரியோ டி ஜெனிரோவில் நடைபெறும் பிரிக்ஸ் உச்சி மாநாட்டில் பங்கேற்க உள்ளேன். அதோடு, இருதரப்பு அரசு முறைப் பயணமாகவும் இது இருக்கும். இந்திய பிரதமர் ஒருவர் பிரேசில் செல்வது கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்குப் பிறகு இதுவே முதல்முறை. ரியோ பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் போது உலகத் தலைவர்களுடன் பல்வேறு சந்திப்புகள் இருக்கும். இந்தியா-பிரேசில் ஒத்துழைப்பின் புதிய வழிகளைப் பற்றி விவாதிக்க அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வாவைச் சந்திக்க ஆர்வமாக உள்ளேன்.

காலனித்துவத்தை எதிர்ப்பதில் நமக்கும் நமீபியாவுக்கும் இடையே பகிரப்பட்ட வரலாறு உள்ளது. நம்பகமான கூட்டாளியான நமீபியாவுடன் உறவுகளை வலுப்படுத்துவதே எனது பயணத்தின் நோக்கம். அதிபர் டாக்டர் நெடும்போ நந்தி-நதைத்வாவும் நானும் பல துறைகளில் உறவுகளை அதிகரிப்பதற்கான வழிகள் குறித்துப் பேசுவோம். நமீபிய நாடாளுமன்றத்தில் உரையாற்ற இருப்பது ஒரு கவுரவமாக இருக்கும்" என தெரிவித்துள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x