Published : 02 Jul 2025 08:14 AM
Last Updated : 02 Jul 2025 08:14 AM
ஹைதராபாத்: தெலங்கானா மாநிலத்தில் உள்ள சிகாச்சி ரசாயன ஆலையில் உள்ள ரியாக்டர் நேற்று முன்தினம் வெடித்துசிதறியது. இந்த விபத்தில் சம்பவ இடத்தில் 5 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். படுகாயம் அடைந்த 60-க்கும் மேற்பட்டோர் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.
இதில் பலர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். சிகாச்சி ஆலையின் துணை தலைவர் எல்.எஸ் கோஹன் உட்பட இதுவரை 36 பேர் உயிரிழந்துள்ளனர். தெலங்கானா மாநில முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று விபத்து நடந்த ஆலையை ஆய்வு செய்தார். பின்னர், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களை சந்தித்து ஆறுதல் கூறினார்.
அதன் பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது: விபத்து தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஆலோசனை நடத்தினேன். உயிரிழந்தவர்களின் சடலங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைப்பது, காயமடைந்தவர்களுக்கு சிறந்த முறையில் சிகிச்சை அளிப்பது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளேன். இந்த சம்பவம் மிகவும் துரதிருஷ்டவசமானது. இதில் பலர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தில் உள்ள பிள்ளைகளின் கல்வி செலவு முழுவதையும் அரசே ஏற்கும். உயிரிழந்தவர்களின் குடும்பத்துக்கு உடனடியாக ரூ.1 லட்சம் நிதி உதவி வழங்கப்படும். மேலும், தலா ரூ.1 கோடி நிதி உதவியும் வழங்கப்படும். உடல் உறுப்புகளை இழந்து சிகிச்சை பெற்று வருவோருக்கு தலா ரூ.10 லட்சமும், சாதாரண காயம் அடைந்தோருக்கு தலா ரூ.1 லட்சமும் நிதி உதவி அளிக்கப்படும். விபத்து நடந்தபோது 143 தொழிலாளர்கள் பணியில் இருந்துள்ளனர். இவர்களில் 36 பேர் இதுவரை இறந்துள்ளனர்.
17 பேரை காணவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். இடிபாடுகளில் இன்னமும் யாரேனும் சிக்கி இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இவ்வாறு அவர் தெரிவித்தார். ஆலை விபத்தில் உயிரிழந்தோரின் உடல்கள் அடையாளம் காண முடியாத நிலையில் உள்ளன. எனவே டிஎன்ஏ பரிசோதனை நடத்தி உடல்களை உறவினர்களிடம் ஒப்படைக்க அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இளம் தம்பதி உயிரிழப்பு: ஆந்திராவின் கடப்பா மாவட்டம் ஜம்மலமடுகு பகுதியை சேர்ந்த நிகில் ரெட்டியும் அதே பகுதியை சேர்ந்த ரம்யாவும் காதலித்து வந்தனர். குடும்பத்தினர் எதிர்ப்பை மீறி கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
பின்னர் இந்த இளம் தம்பதி, சிகாச்சி ஆலை பணியில் சேர்ந்துள்ளனர். இந்நிலையில் வெடி விபத்தில் இருவரும் உயிரிழந்துள்ளனர். இவர்களின் காதல் திருமணத்தை தொடர்ந்து இரு வீட்டாரும் இணைந்து புது மணத் தம்பதிக்கு திருமண வரவேற்பு நிகழ்ச்சி நடத்த முடிவு செய்திருந்தனர். அதற்குள் இருவரும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT