Published : 02 Jul 2025 07:48 AM
Last Updated : 02 Jul 2025 07:48 AM
புதுடெல்லி: தலைநகர் டெல்லியில் 10 ஆண்டுகளுக்கு மேற்பட்ட டீசல் வாகனங்கள், 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பெட்ரோல் வாகனங்களுக்கு நேற்று முதல் எரிபொருள் வழங்கப்படவில்லை. தலைநகர் டெல்லியில் காற்று மாசு அதிகமாக இருப்பதில் வாகனங்கள் பெரும் பங்கு வகிக்கின்றன. டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்த பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதனால் பழமையான வாகனங்கள் டெல்லியில் இயக்கப்படுவதை தடுத்து நிறுத்த காற்றுத் தர மேலாண்மை ஆணையம் உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. 10 ஆண்டு பழமையான டீசல் வாகனங்கள், 15 ஆண்டு பழமையான பெட்ரோல் வாகனங்கள் ஆயுள் முடிந்தவையாக கருதப்பட்டு அவைகள் தேசிய தலைநகர் மண்டலத்தில் (என்சிஆர்) இயக்கப்படுவதை தடுக்க உத்தரவிட்டது.
இதையடுத்து இந்த உத்தரவு டெல்லியில் நேற்று முதல் அமலுக்கு வந்தது. டெல்லியில் உள்ள 498 எரிபொருள் நிலையங்களில் தானியங்கி நம்பர்பிளேட் அடையாள கேமிராக்கள் பொருத்தப்பட்டன. இந்த கேமிராக்களில் வாகனங்களின் தரவுகளும் இணைக்கப்பட்டுள்ளன.
இது வாகனத்தின் பதிவு எண்ணை சரிபார்த்து எரிபொருள் நிலையங்களுக்கு எச்சரிக்கை அனுப்பும். மேலும் அங்கு போலீஸார், போக்குவரத்து துறையினரும் நிறுத்தப்பட்டு வாகனங்கள் கண்காணிக்கப்படுகின்றன. பழமையான வாகனங்கள் கண்டறியப்பட்டு அதற்கு எரிபொருள் வழங்கப்படவில்லை. இதில் இரு சக்கர வாகனங்கள் உட்பட அனைத்து வாகனங்களும் அடக்கம்.
இது குறித்து பெட்ரோல் பங்க் டீலர் ஒருவர் கூறுகையில், ‘‘இதுபோன்ற பெரிய திட்டத்தை அமல்படுத்துவதற்கு முன் பரிசோதனை நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டிருக்க வேண்டும். கண்காணிப்பு குழுவினர் எத்தனை நாட்கள் இந்த பணியில் ஈடுபடுத்தப்படுவர்? இத்திட்டத்தை தேசிய தலைநகர் மண்டலம் முழுவதும் ஒரே நேரத்தில் அமல்படுத்தியிருக்க வேண்டும்’’ என்றார்.
வாகன ஒட்டி ஒருவர் கூறுகையில், ‘‘இத்திட்டம் பற்றி அறியாதவர்களுக்கு இது மிகப் பெரிய பிரச்சினை. படிக்காதவர்களிடம் இது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த எதுவும் செய்யப்படவில்லை. சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுத்தாமல் நல்ல நிலையில் உள்ள பல வாகனங்கள் உள்ளன? இவற்றை திடீரென மாற்ற வேண்டும் என்றால் வாகன ஓட்டிகளுக்கு மிகப் பெரிய செலவு ஏற்படும். இதற்கு பதில் மாசு கட்டுப்பாடு சான்றிதழ் அவசியம் என்ற நடைமுறையை கொண்டு வந்திருக்கலாம்’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT