Published : 02 Jul 2025 07:07 AM
Last Updated : 02 Jul 2025 07:07 AM
பெரோஸ்பூர்: பாகிஸ்தானையொட்டி அமைந்துள்ள பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகிலுள்ள ஃபட்டுவல்லா கிராமத்தில் இந்திய விமானப்படைக்குச் சொந்தமான விமான ஓடுதளம் உள்ளது. இது 1962, 1965, 1971-ம் ஆண்டுகளில் நடந்த போரின்போது இந்திய விமானப்படை விமானங்களால் பயன்படுத்தப்பட்ட ஓடுதளமாகும்.
இந்நிலையில் பஞ்சாபைச் சேர்ந்த பெண் உஷான் அன்சால், அவரது மகன் நவீன் சந்த் ஆகியோர் இந்த ஓடுதளம் அமைந்துள்ள இடத்தை விற்பனை செய்துள்ளனர். இதுதொடர்பான வழக்கு பஞ்சாப் மற்றும் ஹரியானா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தபோது, ஓடுதள விவகாரம் குறித்து விசாரித்து அறிக்கை தாக்கல் செய்யுமாறு பஞ்சாப் மாநில ஊழல் கண்காணிப்பு அமைப்புக்கு (விபி) நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதைத் தொடர்ந்து கடந்த மாதம் 20-ம் தேதி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அந்த அறிக்கையில் 28 ஆண்டுகளுக்கு முன்னர் அதாவது 1997-ல், போலிப் பத்திரங்களை உஷா அன்சால், நவீன் சந்த் ஆகியோர் வருவாய்த்துறை அதிகாரிகள் உதவியுடன் தயாரித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது ன்று கூறப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து அவர்கள் 2 பேர் மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவு செய்யப்பட்டுள்ளது.
அந்த இடம் தங்களுக்குச் சொந்தமானது என்று கூறி வருவாய்த்துறை அதிகாரிகளின் உதவியுடன் இந்த மோசடியை அரங்கேற்றியுள்ளனர். ஓய்வுபெற்ற வருவாய்த்துறை அதிகாரி நிஷான் சிங் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் இந்த மோசடி விவகாரம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. உஷா அன்சால், நவீன் ஆகியோர் மீது ஆள்மாறாட்டம், மோசடி, ஏமாற்றுதல், போலியாக பத்திரம் தயாரித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக விசாரிக்க போலீஸ் டிஎஸ்பி கரண் சர்மா தலைமையிலான விசாரணைக் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த இடம் தற்போது மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சகத்தின் வசம் உள்ளது.பஞ்சாப் மாநிலம் பெரோஸ்பூர் அருகே ஃபட்டுவல்லா கிராமத்தில் அமைந்துள்ள விமான ஓடுதளம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT