Published : 01 Jul 2025 06:49 PM
Last Updated : 01 Jul 2025 06:49 PM
புதுடெல்லி: பெண்களை மையப்படுத்தி தேர்தல் வாக்குறுதிகளை தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்கள் நிறைவேற்றி வருகின்றன. இதற்கான செலவு 2025 - 26 நிதியாண்டில் ரூ.1 லட்சம் கோடியை தாண்டும் என கிரிசில் ரேட்டிங்ஸ் எனும் தனியார் நிறுவனம் மதிப்பிட்டுள்ளது.
ஒவ்வொரு முறை தேர்தலிலும் போட்டியிடும் அரசியல் கட்சிகள் பெண்களுக்கான வாக்குறுதிகளை அதிகரிப்பது வழக்கமாகி வருகிறது. இதன் பின்னணியில் பெண்களின் வாக்குகளால் ஆட்சியை கைப்பற்ற முடியும் என்பது நம்பிக்கையாக உள்ளது. ஆண்களை விட பெண்கள் அதிகமாக வாக்குப்பதிவு செய்ய முன்வருவதும் காரணமாக உள்ளது.
இந்தச் சூழலில் பெண்களுக்கு அளிக்கப்படும் வாக்குறுதிகளை நிறைவேற்ற அதன் அரசுகளுக்கு ஆகும் செலவு குறித்து கிரிசில் ரேட்டிங்ஸ் எனும் தனியார் நிறுவனம் ஒரு மதிப்பிட்டு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், தமிழகம் உள்ளிட்ட 18 மாநிலங்களுக்கு நடப்பு ஆண்டின் நிதிச் செலவு ரூ.1 லட்சம் கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இப்பட்டியலில் தமிழகமும் இடம்பெற்றுள்ளது.
இத்துடன் உத்தரப் பிரதேசம், பிஹார், ஜார்க்கண்ட், பஞ்சாப், ஹரியானா, மகாராஷ்டிரா, கோவா, குஜராத், கர்நாடகா, தெலங்கானா, ராஜஸ்தான், மேற்கு வங்கம், மத்தியப் பிரதேசம், கேரளா, ஆந்திரா, சத்தீஸ்கர் மற்றும் ஒடிசா ஆகியவையும் இடம்பெற்றுள்ளன. இந்த மாநிலங்களில் ஆட்சியில் இருக்கும் கட்சிகள் தேர்தல் சமயத்தில் பெண்களுக்கான வாக்குறுதிகளை அளித்திருந்தன. எனவே, இந்த 18 மாநிலங்களின் மதிப்பீட்டு அறிக்கை வெளியாகி உள்ளது.
இது குறித்து கிரிசில் ரேட்டிங்ஸ் நிறுவனத்தின் மூத்த இயக்குநர் அனுஜ் சேத்தி கூறுகையில், ‘இந்த 18 மாநிலங்கள் 2019 மற்றும் 2024 நிதியாண்டுக்கு இடையில் சமூகத் துறை திட்டங்களுக்காக தங்கள் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் சராசரியாக 1.40 முதல் 1.60 சதவிகிதம் வரை செலவிட்டுள்ளன. அவர்களின் பட்ஜெட் மதிப்பீடுகளின் படி, நடப்பு நிதியாண்டில் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தியில் சுமார் 2 சதவீதம் செலவிட முடியும். இதன் காரணமாக அவர்களின் மூலதனச் செலவு பாதிக்கப்படலாம்.
2024 நிதியாண்டில் இருந்ததை விட 2025 - 2026 நிதியாண்டில் சமூக நலச் செலவு சுமார் ரூ.2.3 லட்சம் கோடி அதிகரிக்கும் என்று மதிப்பிடப் பட்டுள்ளது. இதில் சுமார் 1 லட்சம் கோடி ரூபாய் பெண்களுக்கு நேரடி மானியமாக வழங்கப்படவுள்ளது. இது முக்கியமாக தேர்தல் வாக்குறுதிகளுடன் தொடர்புடையதாக இருக்கும். மீதமுள்ள ரூ.1.3 லட்சம் கோடி அதிகரிப்பு முக்கியமாக பின் தங்கிய வகுப்பினருக்கு நிதி மருத்துவ உதவி மற்றும் சில குழுக்களுக்கு சமூக பாதுகாப்பு ஓய்வூதியமாக இருக்கும்” என்று அனுஜ் சேத்தி கூறியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT