Published : 30 Jun 2025 05:42 PM
Last Updated : 30 Jun 2025 05:42 PM
சென்னை: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று (ஜூன் 30) முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு பயணம் மேற்கொள்கிறார்.
இதுகுறித்து மத்திய அரசின் பத்திரிகை தகவல் அலுவலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘மத்திய நிதி மற்றும் பெருநிறுவன விவகாரங்களுக்கான அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2025 ஜூன் 30 முதல் ஜூலை 5 வரை ஸ்பெயின், போர்ச்சுகல், பிரேசில் நாடுகளுக்கு அதிகாரபூர்வமாக பயணம் மேற்கொள்கிறார். அவரது தலைமையில் நிதி அமைச்சகத்தின் பொருளாதார விவகாரங்கள் துறையைச் சேர்ந்த இந்தியக் குழுவும் பயணம் மேற்கொள்கிறது.
தனது பயணத்தின் ஒரு பகுதியாக, ஸ்பெயினில் உள்ள செவில்லி நகரில், ஐக்கிய நாடுகள் சபையால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 4-வது சர்வதேச மேம்பாட்டு நிதி மாநாட்டில் கலந்து கொள்ளும் மத்திய நிதியமைச்சர், இந்தியா சார்பில் அறிக்கையை சமர்ப்பிக்கிறார்.
“நிலையான வளர்ச்சிக்கான தனியார் மூலதனத்தின் திறனை ஊக்குவித்தல்" என்ற தலைப்பில் நடைபெறும் இந்த உச்சி மாநாட்டில் அவர் உரையாற்றுகிறார். இந்த மாநாட்டின் இடையே, ஜெர்மனி, பெரு மற்றும் நியூசிலாந்தை சேர்ந்த மூத்த அமைச்சர்களையும், ஐரோப்பிய முதலீட்டு வங்கியின் தலைவரையும் மத்திய நிதியமைச்சர் சந்திக்கிறார்.
தனது பயணத்தின் ஒரு பகுதியாக, போர்ச்சுகலின் லிஸ்பன் நகருக்கு செல்லும் மத்திய நிதியமைச்சர், போர்ச்சுகல் நிதியமைச்சருடன் இருதரப்பு சந்திப்பை நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் முக்கிய முதலீட்டாளர்கள் மற்றும் இந்திய வம்சாவளியினருடன் அவர் கலந்துரையாடுகிறார்.
ரியோ டி ஜெனிரோ நகரில் நடைபெறும் புதிய வளர்ச்சி வங்கியின் 10-வது ஆண்டு கூட்டத்தில் மத்திய நிதியமைச்சர் உரையாற்றுகிறார். மேலும் பிரிக்ஸ் கூட்டமைப்பின் நிதியமைச்சர்கள் மற்றும் மத்திய வங்கி ஆளுநர்கள் கூட்டத்திலும் அவர் கலந்து கொள்கிறார்.
“உலகளாவிய தெற்கு பகுதிக்கான ஒரு முதன்மையான வளர்ச்சி வங்கியை உருவாக்குதல்.” என்ற தலைப்பில் நடைபெறும் வங்கி ஆளுநர்கள் கருத்தரங்கிலும் நிர்மலா சீதாராமன் உரையாற்றுவார். மேலும், பிரேசில், சீனா, இந்தோனேசியா மற்றும் ரஷ்யாவைச் சேர்ந்த நிதியமைச்சர்களுடனும் இருதரப்பு சந்திப்புகளை மத்திய நிதியமைச்சர் நடத்துவார்.” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT