Published : 30 Jun 2025 04:44 PM
Last Updated : 30 Jun 2025 04:44 PM
கொல்கத்தா: கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்று அந்த வழக்கை விசாரிக்கும் சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
கொல்கத்தா சட்டக்கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைதான மனோஜித் மிஸ்ரா, பிரதிம் முகர்ஜி மற்றும் ஜைத் அகமது ஆகிய மூன்று பேரும் ஏற்கெனவே சில மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் தெரியவந்துள்ளதாக இந்த சம்பவத்தை விசாரிக்கும் 9 பேர் கொண்ட சிறப்புப் புலனாய்வுக் குழு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து பேசிய சிறப்புப் புலனாய்வுக் குழுவின் அதிகாரிகள், “இந்த முழு விஷயமும் முன்கூட்டியே திட்டமிடப்பட்டது. பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய, அவர்கள் மூவரும் பல நாட்களாக சதி செய்து வந்தனர். அந்த இளம்பெண் கல்லூரியில் சேர்ந்த முதல் நாளிலிருந்தே, அவர் முக்கிய குற்றவாளியால் குறிவைக்கப்பட்டதை நாங்கள் விசாரணையில் கண்டறிந்துள்ளோம்.
இவர்கள் ஏற்கெனவே சில மாணவிகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதும் எங்களுக்கு தெரியவந்துள்ளது. இவர்கள் மூவரும் இதுபோன்ற சம்பவத்தை தங்கள் மொபைல் போன்களில் பதிவுசெய்து, பின்னர் பாதிக்கப்பட்டவர்களை அச்சுறுத்த அந்த வீடியோக்களை பயன்படுத்துவார்கள். எனவே சம்பவம் நடந்த அன்று இவர்கள் மூவரும் படம்பிடித்ததாகக் கூறப்படும் மொபைல் வீடியோக்களைத் தேடத் தொடங்கியுள்ளோம்.
குற்றம் சாட்டப்பட்ட பிரதிம் முகர்ஜி மற்றும் அகமதுவின் வீடுகளில் ஞாயிற்றுக்கிழமை சோதனை நடத்தப்பட்டது. இது மற்றும் பிற சம்பவங்கள் தொடர்பான வீடியோக்களை நாங்கள் தேடி வருகிறோம். அவர்கள் எடுத்த அந்த வீடியோ கிளிப்புகள் வேறு சில குழுக்களுக்கு பகிரப்பட்டதா என்பதையும் கண்டறிய நாங்கள் முயற்சிக்கிறோம். அப்படியானால், இந்த வீடியோக்களை பெற்றவர்களையும் விசாரிப்போம். சம்பவம் நடந்த ஜூன் 25ம் தேதி மாலை தெற்கு கொல்கத்தா சட்டக்கல்லூரியில் இருந்த 25 பேர் அடங்கிய பட்டியலை தயாரித்துள்ளோம். இது தொடர்பாக அவர்கள் அனைவரும் விசாரிக்கப்படுவார்கள்” என்று தெரிவித்தனர்
நடந்தது என்ன? - கொல்கத்தாவின் கஸ்பாவில் உள்ள தெற்கு கொல்கத்தா சட்டக் கல்லூரியில் மாணவி ஒருவர், கூட்டுப் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டார். ஜூன் 25 அன்று இரவு 7.30 மணி முதல் இரவு 10.50 மணி வரை கல்லூரி வளாகத்திற்குள் இந்த பாலியல் வன்கொடுமை நடந்ததாக காவல்துறை தெரிவித்தது. இதனையடுத்து, மனோஜித் மிஸ்ரா (30 வயது), பிரமித் முகர்ஜி (20 வயது), ஜைத் அகமது (19 வயது) ஆகியோர் இவ்விவகாரத்தில் கைது செய்யப்பட்டனர்.
பாதிக்கப்பட்ட மாணவிக்கு கொல்கத்தா தேசிய மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது. சாட்சிகள் பரிசோதிக்கப்பட்டு அவர்களின் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. சம்பவம் நடந்த இடத்தில் தடயவியல் பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
‘மனோஜித் ஒரு சைக்கோ’ - மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் 24 வயது சட்டக் கல்லூரி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான மேங்கோ என்ற மனோஜித் மிஸ்ரா நீண்ட காலமாக மனநோயால் (சைக்கோ) பாதிக்கப்பட்டவர் என அவரது முன்னாள் வகுப்பு தோழர்களும், ஜூனியர்களும் குற்றம்சாட்டி உள்ளனர்.
இதுகுறித்து அவர்கள் கூறியதாவது: சட்டக்கல்லூரி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள முக்கிய குற்றவாளியான மனோஜித் மிஸ்ரா நீண்ட காலமாக மனநோயால் பாதிக்கப்பட்டிருந்ததுடன், பாலியல் வன்முறையில் ஈடுபடும் அளவுக்கு மோசமான நடத்தை உடையவர்.
பாலியல் வன்கொடுமை, தாக்குதல், மிரட்டி பணம் பறித்தல் மற்றும் உடல் ரீதியில் துன்புறுத்தல் செய்வதாக மிஸ்ரா மீது ஏராளமான புகார்கள் மாணவிகளின் சார்பில் தரப்பட்டும் அவருக்கு எதிராக எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
கல்லூரி வளாகத்துக்குள் எப்போது வேண்டுமானாலும் வந்து போவதுடன், கல்லூரி வாட்ஸ்அப் குழு, தகவல் ஓட்டத்தை கட்டுப்படுத்தும் அளவுக்கு மிஸ்ராவின் செல்வாக்கு இருந்தது.
மிஸ்ராவும் அவரது நண்பர்களும் பெண்களுக்கு எதிரானவர்கள் என்பது நன்கு தெரிந்திருந்தும் அவர்களை பாதுகாக்கும் வேலையில்தான் கல்லூரி நிர்வாகத்தினர் தொடர்ந்து ஈடுபட்டு வந்தனர். இவ்வாறு முன்னாள் மற்றும் ஜூனியர் மாணவர்கள் தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT