Last Updated : 30 Jun, 2025 12:30 PM

 

Published : 30 Jun 2025 12:30 PM
Last Updated : 30 Jun 2025 12:30 PM

‘போர் விமானத்தை இழந்தோம்’ - கடற்படை அதிகாரியின் பேச்சும், இந்திய தூதரகத்தின் விளக்கமும்!

ஜகர்த்தா: ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையின் தொடக்கத்தில் போர் விமானங்களை இந்திய விமானப்படை இழந்ததாக பாதுகாப்பு படை அதிகாரி ஒருவர் இந்தோனேசியாவில் தெரிவித்தது சர்ச்சை ஆகியுள்ளது.

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்காமல் தீவிரவாதிகளின் கட்டமைப்பை மட்டுமே இலக்காக கொண்டு தாக்க வேண்டுமென்ற கட்டளை காரணமாக போர் விமானங்களை இழக்க வேண்டிய நிலை ஏற்பட்டதாக அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

கடந்த 10-ம் தேதி இந்தோனேசியாவில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் இந்திய கடற்படை அதிகாரி கேப்டன் சிவகுமார் உரையாற்றினார். அப்போது தான் இதை சொல்லியதாக தகவல். இந்த வீடியோ நேற்று (ஜூன் 29) கவனம் பெற்றது. இந்நிலையில், அண்டை நாடுகளை போல் இல்லாமல் இந்திய பாதுகாப்பு படை மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்களின் கீழ் சேவை புரிவதாக மட்டுமே அவர் தெரிவித்ததாக இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் தெரிவித்துள்ளது.

ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கையில் போர் விமான இழப்பு தொடர்பாக பாதுகாப்பு படை அதிகாரியின் பேச்சை சுட்டிக்காட்டி ஆளும் அரசு தேசத்தை தவறாக வழிநடத்தியதாக காங்கிரஸ் கட்சி குற்றம்சாட்டியது.

“கருத்தரங்கில் பாதுகாப்பு படை அதிகாரி தெரிவித்த கருத்துக்கு மாறாக அது மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. மேலும், ஊடக செய்திகள் அதை தவறாக சுட்டிக்காட்டி உள்ளன. மற்ற அண்டை நாடுகளை போல் அல்லாமல் மக்களால் தேர்வு செய்யப்பட்ட ஆட்சியாளர்களின் தலைமையின் கீழ் பாதுகாப்பு படை செயல்பட்டு வருகிறது. ஆபரேஷன் சிந்தூரின் நோக்கம் பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதிகளின் உள்கட்டமைப்பை தாக்கி அழிப்பதுதான்” என இந்தோனேசியாவில் உள்ள இந்திய தூதரகம் கூறியுள்ளது.

பாகிஸ்தான் நாட்டு ராணுவ நிலைகளை தாக்க வேண்டாம் என்ற கட்டளையின் காரணமாக போர் விமானங்களை இழக்க வேண்டியதானது என அந்த பாதுகாப்புப் படை அதிகாரி தனது உரையில் குறிப்பிட்டுள்ளார்.

அதன் பின்னர் தாக்குதல் உத்தியை மாற்றி அங்குள்ள ராணுவ நிலைகளையும் குறிவைத்தோம். அதன் பின்னர் தான் தரையிலிருந்து வானத்தில் உள்ள இலக்கை தாக்கும் ஏவுகணைகள் மற்றும் பிரம்மோஸ் ஏவுகணையை பயன்படுத்தினோம் என அவர் விவரித்தார்.

கடந்த மாதம் சிங்கப்பூரில் நடைபெற்ற நிகழ்வில் “இழப்புகள் முக்கியம் அல்ல, முடிவுகள்தான் முக்கியம்” என முப்படை தலைமை தளபதி அனில் சவுகான் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.

ஆபரேஷன் சிந்தூர்: காஷ்மீரில் நடந்த பஹல்காம் தீவிரவாத தாக்குதலுக்கு பதிலடி தரும் விதமாக, பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் செயல்பட்ட தீவிரவாத கட்டமைப்புகளை குறிவைத்து கடந்த மே 7-ம் தேதி இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ ராணுவ நடவடிக்கையை தொடங்கியது.

முதலில் தீவிரவாத கட்டமைப்புகளை இந்தியா தாக்கியது. இதற்கு பதிலடியாக பாகிஸ்தான் ராணுவம் இந்திய எல்லையோர மாநிலங்களில் தாக்குதல் முயற்சியை மேற்கொண்டது. அதை இந்திய பாதுகாப்பு படை முறியடித்தது. அதோடு பாகிஸ்தான் ராணுவ நிலைகளையும் தாக்கி அழித்தது. இந்நிலையில், மே 10-ம் தேதி ராணுவ நடவடிக்கைகளை நிறுத்துவது தொடர்பாக இந்தியா மற்றும் பாகிஸ்தான் இடையே உடன்பாடு ஏற்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x