Published : 30 Jun 2025 08:21 AM
Last Updated : 30 Jun 2025 08:21 AM
திருவனந்தபுரம்: கேரளாவில் பள்ளி மாணவ, மாணவியரின் உடல்நலன், மனநலனை மேம்படுத்த ஜும்பா நடன பயிற்சி வழங்கப்படுகிறது. இதற்கு மத அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. ஜும்பா என்பது நடனத்தை உள்ளடக்கிய உடற்பயிற்சி ஆகும். கடந்த 2001-ம் ஆண்டில் கொலம்பிய நடன கலைஞர் பீட்டோ பெரெஸ், ஜும்பா நடனத்தை உருவாக்கினார். தற்போது உலகம் முழுவதும் 180-க்கும் மேற்பட்ட நாடுகளில் இந்த நடனம் பிரபலமாக இருக்கிறது.
கேரளாவில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவ, மாணவிருக்கு ஜும்பா நடன பயிற்சி வழங்கும் திட்டம் நடப்பு கல்வியாண்டில் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. இதன்மூலம் மாணவ, மாணவியரின் உடல் நலன், மன நலன் மேம்படும். போதை பொருள் பழக்கத்துக்கு மாணவர்கள் அடிமையாவது தடுக்கப்படும் என்று கேரள கல்வித் துறை விளக்கம் அளித்து உள்ளது. ஆனால் பல்வேறு மத அமைப்புகள் ஜும்பா நடன பயிற்சி திட்டத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
முஸ்லிம் மாணவர்கள் கூட்டமைப்பின் தலைவர் நவாஸ் கூறும்போது, “ஜும்பா நடனம் அநாகரிமாக இருக்கிறது. இந்த திட்டத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்’’ என்று தெரிவித்தார். கேரளாவை சேர்ந்த எஸ்ஒய்எஸ், வோர்ல்டு இஸ்லாமிக் கூட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளும் ஜும்பா நடன பயிற்சி திட்டத்துக்கு கடு்ம் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
இதுகுறித்து கேரள பள்ளி கல்வித் துறை அமைச்சர் சிவன்குட்டி கூறியதாவது: போதை பொருள் ஒழிப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக பள்ளிகளில் ஜும்பா நடன பயிற்சி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக சில அமைப்புகள் ஆட்சேபம் தெரிவித்துள்ளன.
அந்த அமைப்புகளுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். யோகா, ஏரோபிக்ஸ், ஜும்பா உள்ளிட்டவை உடல்நலனை பேணும் பயிற்சிகள் ஆகும். ஜும்பா நடன பயிற்சியின்போது மாணவ, மாணவியருக்கு சிறப்பு உடைகள் பரிந்துரை செய்யப்படவில்லை. பள்ளி சீருடையிலேயே அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.
மிக எளிதான உடற்பயிற்சிகள் மட்டுமே கற்று கொடுக்கப்படுகிறது. சிலர் உள்நோக்கத்துடன் ஜும்பா நடன பயிற்சி திட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இந்த திட்டத்தை வாபஸ் பெறும் பேச்சுக்கே இடமில்லை. பள்ளி மாணவ, மாணவியருக்கு தொடர்ந்து ஜும்பா நடன பயிற்சி வழங்கப்படும். இவ்வாறு அமைச்சர் சிவன் குட்டி தெரிவித்தார்.
கேரள உயர் கல்வித் துறை அமைச்சர் ஆர்.பிந்து கூறியதாவது: பிற்போக்கான எண்ணம் கொண்டவர்கள் ஜும்பா நடன பயிற்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்கின்றனர். இன்றைய காலத்தில் விண்வெளிக்கு பெண்கள் பயணம் மேற்கொள்கின்றனர். மாணவிகளை மையப்படுத்தி ஜும்பா நடனத்துக்கு எதிர்ப்பை தெரிவிப்பதை ஏற்றுக் கொள்ள முடியாது. இவ்வாறு அமைச்சர் ஆர். பிந்து தெரிவித்தார்.
கேரள இளைஞர் காங்கிரஸ் தலைவர் ராகுல் மம்கூத்ததில் கூறும்போது, “பள்ளிகளில் ஜும்பா நடன பயிற்சி அளிக்கப்படுவதை காங்கிரஸ் வரவேற்கிறது. இது குழந்தைகளின் உடல்நலன், மனநலன் சார்ந்த பயிற்சி ஆகும். பள்ளிப் பருவத்திலேயே அவர்களுக்கு உடற்பயிற்சியின் அவசியத்தை கற்றுக் கொடுக்க வேண்டும்’’ என்று தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT