Published : 30 Jun 2025 08:01 AM
Last Updated : 30 Jun 2025 08:01 AM
புதுடெல்லி: இந்தியா - பாகிஸ்தான் இடையே கடந்த மே மாதம் நடைபெற்ற போரில் இந்திய விமானப்படையில் எத்தனை போர் விமானங்கள் சேதம் அடைந்தன என்ற விவரத்தை தெரிவிக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ராகுல் கேள்வி எழுப்பினார்.
முப்படை தளபதி ஜெனரல் அனில் சவுகான் ஏற்கெனவே அளித்த பேட்டியில், ‘‘இந்தியாவின் 6 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டது என பாகிஸ்தான் கூறுவது முற்றிலும் தவறான தகவல். தாக்குதல் உக்திகளில் ஏற்பட்ட தவறுகளை சரிசெய்து, அனைத்து வகை விமானங்களையும் பயன்படுத்தி பாகிஸ்தானின் தொலைதூர பகுதிகளில் துல்லிய தாக்குதல் நடத்தினோம்’’ என்றார்.
இந்நிலையில் இந்தோனேஷியாவில் சிறப்பு பணிக்கு அனுப்பப்பட்ட இந்திய கடற்படை கேப்டன் சிவ குமார் என்பவர் சமூக ஊடகத்தில் விடுத்த செய்தியில், ‘‘பாகிஸ்தான் மீதான தாக்குதலில், அரசியல் தலைமையின் கட்டுப்பாடு காரணமாகத்தான், இந்திய விமானப்படை போர் விமானங்களை இழந்தது’’ என கூறி இருந்தார்.
இதை மேற்கோள் காட்டியுள்ள காங்கிரஸ் மூத்த தலைவர் பவன் கெரா, ‘‘இந்தோனேஷியாவுக்கான இந்திய பாதுகாப்புத்துறை அதிகாரி மற்றொரு அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார். உண்மையில் இந்தியா எத்தனை விமானங்களை இழந்தது?
இந்த விவகாரம் குறித்து சிறப்பு நாடாளுமன்ற கூட்டத்தை கூட்டி விவாதிக்க வேண்டும் என்ற எங்களின் கோரிக்கையை அரசு தவிர்த்தது. பாதுகாப்பு விஷயத்தில் சமரசம் செய்யப்பட்டதை அவர்கள் அறிவர். இதை காங்கிரஸ் வெளிப்படுத்தும் என அரசு பயப்படுகிறது’’ என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT