Published : 30 Jun 2025 07:35 AM
Last Updated : 30 Jun 2025 07:35 AM
புரி: உலகம் புகழ்பெற்ற ஒடிசாவின் புரி ஜெகந்நாதர் கோயில் ரத யாத்திரை 2 நாட்களுக்கு முன் தொடங்கியது. புரியில் உள்ள குடிச்சா கோயில் அருகே நேற்று காலை 4 மணிக்கு ரத யாத்திரை ஊர்வலம் வந்தது. அலங்கரிக்கப்பட்ட ரதத்தை காண ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே இடத்தில் குவிந்திருந்தனர்.
பக்தர்கள் கூட்டம் அதிகம் இருந்த பகுதியில் ரதயாத்திரையில் பங்கேற்கும் இரண்டு வாகனங்கள் உள்ளே நுழைந்தன. அப்போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி பிரேமகந்த் மொகந்தி (80), வசந்தி சாகு (36), பிரபதி தாஸ் (42) ஆகியோர் உயிரிழந்தனர். 50-க்கும் மேற்பட்ட பக்தர்கள் காயம் அடைந்தனர்.
கூட்ட நெரிசலை கட்டுப்படுத்த, காவல்துறை அதிகாரிகள் முறையான நடவடிக்கை மேற்கொள்ளவில்லை, விஐபிக்களின் தரிசனத்துக்கு காவல்துறை ஏற்பாடு செய்ததே கூட்ட நெரிசலுக்கு காரணம் என கூறப்படுகிறது.
ரூ.25 லட்சம் உதவித் தொகை: இச்சம்பவத்துக்கு வருத்தம் தெரிவித்த ஒடிசா முதல்வர் மோகன் சரண் மாஜி, உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் நிதியுதவி அறிவித்தார். பக்தர்களின் பாதுகாப்பில் அலட்சியமாக இருந்த புரி காவல் துணை ஆணையர் விஷ்ணு சரண் பாதி மற்றும் கமாண்டென்ட் அஜய் பதி ஆகியோரை சஸ்பெண்ட் செய்யவும், மாவட்ட ஆட்சியர் சித்தரர்த் ஸ்வைன், எஸ்.பி. பினிட் அகர்வால் ஆகியோரை பணியிட மாற்றம் செய்யவும் முதல்வர் மோகன் சரண் உத்தரவிட்டார். பாதுகாப்பு குறைபாடுகளுக்கு காரணமானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் உறுதி அளித்தார்.
எக்ஸ் தளத்தில் அவர் விடுத்துள்ள இரங்கல் செய்தியில், ‘‘மகா பிரபு ஜெகந்நாதரை தரிசனம் செய்ய வேண்டும் என்ற தீவிர ஆர்வம் பக்தர்கள் இடையே ஏற்பட்டதால் இந்த துரதிர்ஷ்டமான சம்பவம் ஏற்பட்டுள்ளது. இதற்காக ஜெகந்நாதர் பக்தர்களிடம் நானும், எனது அரசும் மன்னிப்பு கோருகிறோம். உயிரிழந்த பக்தர்களின் குடும்பத்தினருக்கு நாங்கள் இரங்கலை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கு இந்த சோகத்தை தாங்கக்கூடிய மனவலிமையை ஜெகந்நாதர் அளிக்க வேண்டும் என வேண்டிக் கொள்கிறேன்’’ என தெரிவித்துள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT