Last Updated : 29 Jun, 2025 07:06 PM

1  

Published : 29 Jun 2025 07:06 PM
Last Updated : 29 Jun 2025 07:06 PM

புரி கோயில் கூட்ட நெரிசல் உயிரிழப்பு: மாவட்ட எஸ்.பி, ஆட்சியர் பணியிட மாற்றம்

புரி: புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியானதை தொடர்ந்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடமாற்றம் செய்யப்பட்டனர்.

புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் இன்று ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக விரிவான விசாரணை நடைபெற்று வரும் நிலையில், புரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வினித் அகர்வால் மற்றும் மாவட்ட ஆட்சியர் சித்தார்த்த சங்கர் ஸ்வெயின் ஆகியோரை மாநில அரசு பணியிடமாற்றம் செய்துள்ளது. இதனையடுத்து, தற்போது ஏடிஜிபியாக ஆக உள்ள பினாக் மிஸ்ரா, பூரியின் எஸ்.பியாக பதவியேற்கிறார். அதே நேரத்தில் குர்தா கலெக்டர் சஞ்சல் ராணா, புரியின் புதிய மாவட்ட ஆட்சியராக பொறுப்பேற்கவுள்ளார். மேலும், இந்த விவகாரத்தில் டிசிபி பிஷ்ணு பதி மற்றும் கமாண்டன்ட் அஜய் பதி ஆகிய இரண்டு காவல்துறை அதிகாரிகளையும் பணியிடைநீக்கம் செய்ததாக ஒடிசா முதல்வர் அறிவித்துள்ளார்.

ரூ.25 லட்சம் நிதி உதவி: புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரையில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.25 லட்சம் நிதி உதவி வழங்கப்படும் என்றும் மாநில அரசு அறிவித்துள்ளது.

நடந்தது என்ன? - ஒடிசாவின் கடற்கரை நகரான புரியில் உலகப் புகழ் பெற்ற ஜெகநாதர் கோயில் அமைந்துள்ளது. புரி ஜெகந்நாதர் கோயிலுக்கு நாள்தோறும் 50,000-க்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருகின்றனர். அதுவும் புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரைக்காக லட்சக்கணக்கானோர் குவிவதுண்டு. வழக்கம்போல் இந்த ஆண்டும் ரத யாத்திரைக்காக புரி நகரமே விழாக்கோலம் பூண்டுள்ளது.

இந்நிலையில், புரி ஜெகநாதர் கோயில் ரத யாத்திரை நிகழ்வில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 3 பேர் பலியாகினர். சுமார் 50 பேர் காயமடைந்தனர். ஸ்ரீ குந்திச்சா கோயில் அருகே இன்று (ஞாயிற்றுக்கிழமை) அதிகாலை 4.30 மணியளவில் இந்த துயரச் சம்பவம் நிகழ்ந்துள்ளது.

இது குறித்து புரி மாவட்ட ஆட்சியர் சித்தார்த் ஸ்வெயின் கூறுகையில், “ரத யாத்திரையை ஒட்டி அதிகாலை 4 முதல் 4.30 மணிக்குள் ஸ்ரீ குந்திச்சா கோயில் அருகே, கூட்டம் குவிந்தது. எதிர்பாராத வகையில் கூட்டம் திரண்டதால் நெரிசலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்தவர்கள் ப்ரவிதா தாஸ் (52), பிரேம் கந்தா (52), பசந்தி சாஹு (42) என அடையாளம் காணப்பட்டுள்ளனர். இந்த நெரிசல் சம்பவம் தொடர்பாக விசாரணை நடந்து வருகிறது. கூட்ட மேலாண்மையில் ஏதேனும் குறைபாடு இருந்ததா என்ற கோணத்தில் விசாரணை நடக்கிறது.” என்றார்.

மன்னிப்பு கோரிய முதல்வர்: இந்த விபத்து குறித்து ஒடிசா முதல்வர் சரண் மாஞ்சி வெளியிட்ட இரங்கல் செய்தியில், “பக்தர்கள் மத்தியில் மஹாபிரபுவையும், சாரதாபாலியையும் காண வேண்டி ஏற்பட்ட அதீத ஆர்வத்தால், துரதிர்ஷ்டவசமாக கூட்ட நெரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த விஷயத்துக்காக நானும், எனது அரசாங்கமும் ஜெகநாதர் பக்தர்களிடம் மன்னிப்பு கோருகிறோம்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x