Last Updated : 29 Jun, 2025 05:43 PM

 

Published : 29 Jun 2025 05:43 PM
Last Updated : 29 Jun 2025 05:43 PM

ஜார்க்கண்ட்: ஜாம்ஷெட்பூரில் வெள்ளத்தில் சிக்கிய பள்ளியில் இருந்து 162 குழந்தைகள் மீட்பு

ஜாம்ஷெட்பூர்: கனமழையால் ஏற்பட்ட திடீர் வெள்ளப்பெருக்கு காரணமாக ஜார்க்கண்ட் மாநிலம் ஜாம்ஷெட்பூரில் உள்ள கோவாலி காவல்நிலைய எல்லைக்கு உட்பட்ட லவ் குஷ் குடியிருப்புப் பள்ளியில் சிக்கித் தவித்த 162 குழந்தைகளை காவல்துறையினர் துரிதமாக செயல்பட்டு மீட்டனர்.

இதுகுறித்து ஜாம்ஷெட்பூர் காவல்துறை வெளியிட்ட எக்ஸ் பதிவில், “கனமழையால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு காரணமாக கோவாலி காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட லவ் குஷ் குடியிருப்புப் பள்ளியில் சிக்கித் தவித்த 162 குழந்தைகளை ஜாம்ஷெட்பூர் காவல்துறையினர் வெற்றிகரமாக மீட்டு அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.” என்று தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பேசிய காவல்துறை கண்காணிப்பாளர் ரிஷபா கார்க், “கனமழை காரணமாக பள்ளி வளாகம் வெள்ளத்தில் மூழ்கியதால், லவ் குஷ் குடியிருப்புப் பள்ளியைச் சேர்ந்த 162 மாணவர்கள் சிக்கியுள்ளதாக எங்களுக்குத் தகவல் கிடைத்தது. பள்ளி கட்டிடம் நீரில் மூழ்கியதால், ஆசிரியர்கள் அனைத்து மாணவர்களையும் மேல் தளத்துக்கு மாற்றினர், அங்கு அவர்கள் இரவு முழுவதும் இருந்தனர். இன்று அதிகாலை 5.30 மணியளவில் தகவல் கிடைத்ததும், காவல்துறை அதிகாரிகள் மற்றும் தீயணைப்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிராம மக்களின் உதவியுடன் மாணவர்களை மீட்டனர். மீட்புப் பணிக்காக படகுகள் பயன்படுத்தப்பட்டது.” என்று கூறினார்

இந்திய வானிலை ஆய்வு மையம் கணிப்பு: இந்தச் சூழலில், ஜார்க்கண்ட் முழுவதும் தொடர்ந்து பரவலாக மழை பெய்யும் என்றும், அடுத்த இரண்டு நாட்களுக்கு தெற்கு மற்றும் அருகிலுள்ள மத்திய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யும் என்றும் இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

ராஞ்சியில் உள்ள வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்திக்குறிப்பில், “மாநிலம் முழுவதும் பருவமழை தீவிரமாகி உள்ளது. ஜூலை 5-ம் தேதி வரை பெரும்பாலான இடங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஜூலை 1 மற்றும் 2-ம் தேதிகளில் வடமேற்கு மற்றும் வடமத்திய ஜார்க்கண்டின் அருகிலுள்ள பகுதிகளில் மிக கனமழை பெய்யும். வடகிழக்கின் சில மாவட்டங்களில் கனமழை பெய்யும். இந்த பருவமழை காலத்தில் இதுவரை ஜார்க்கண்ட் மாநிலத்தில் இயல்பை விட 81% அதிக மழை பெய்துள்ளது. ராஞ்சி மாவட்டத்தில் 198% அதிகப்படியான மழை பதிவாகியுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x