Last Updated : 29 Jun, 2025 02:24 PM

2  

Published : 29 Jun 2025 02:24 PM
Last Updated : 29 Jun 2025 02:24 PM

‘ஒரு குடும்பத்தையே உடைத்த மஹுவா மொய்த்ரா தான் பெண் விரோதி’ - கல்யாண் பானர்ஜி விமர்சனம்

கொல்கத்தா: சட்டக் கல்லூரி மாணவி கூட்டுப் பாலியல் வன்கொடுமை தொடர்பாக திரிணமூல் காங்கிரஸ் எம்.பிக்கள் கல்யாண் பானர்ஜி மற்றும் மஹுவா மொய்த்ரா இடையே கடுமையான வார்த்தைப் போர் வெடித்துள்ளது.

கொல்கத்தா சட்டக் கல்லூரி மாணவி கடந்த ஜூன் 25-ம் தேதி இரவு ஒரு கும்பலால் பாலியல் வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டார். சட்டக் கல்லூரி வளாகத்துக்குள் நடைபெற்ற இந்தச் சம்பவம் அம்மாநிலத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதுகுறித்து கருத்து தெரிவித்த திரிணமூல் எம்.பி கல்யாண் பானர்ஜி, “ஒரு நண்பர் மற்றொரு நண்பரை பாலியல் வன்கொடுமை செய்தால், அவரின் பாதுகாப்பை எவ்வாறு உறுதி செய்ய முடியும்? கல்லூரியில் போலீஸார் இருப்பார்களா? இது மாணவர்களால் மற்றொரு மாணவிக்கு நடந்த கொடுமை, அவரை (பாதிக்கப்பட்டவரை) யார் பாதுகாப்பார்கள்?. பெண்கள் யாருடன் வெளியே செல்கிறோம் என்பதை அறிந்திருக்க வேண்டும்.” என்று கேள்வி எழுப்பினார். இந்த கருத்து பெரும் சர்ச்சையை உருவாக்கியது.

கல்யாண் பானர்ஜியின் கருத்துக்கள் அவரது தனிப்பட்ட கருத்து எனத் தெரிவித்து திரிணமூல் காங்கிரஸ் விலகிக்கொண்டது. கட்சியின் இந்த பதிவை டேக் செய்த எம்.பி மஹுவா மொய்த்ரா, “இந்தியாவில் பெண் வெறுப்பு கட்சி எல்லைகளுக்கு அப்பாற்பட்டது. திரிணமூல் காங்கிரஸ் இக்கருத்திலிருந்து விலகுவது என்பது என்னவென்றால், இந்த அருவருப்பான கருத்துக்களை யார் சொன்னாலும் நாங்கள் கண்டிக்கிறோம் என்பதுதான்.” எனத் தெரிவித்திருந்தார்.

இதற்கு பதிலடி கொடுத்த கல்யாண் பானர்ஜி, “மஹுவா தனது தேனிலவுக்குப் பிறகு இந்தியாவுக்குத் திரும்பி வந்து என்னுடன் சண்டையிடத் தொடங்கியுள்ளார். அவர் என்னைப் பெண்ணுக்கு எதிரானவர் என்று குற்றம் சாட்டுகிறார். அது என்ன? அவர் ஒருவரின் 40 வருட திருமணத்தை முறித்து 65 வயதுடைய நபரை மணந்தார். அந்தப் பெண்ணை அவர் காயப்படுத்தவில்லையா?.

நெறிமுறைகளை மீறியதற்காக நாடாளுமன்றத்தில் இருந்து வெளியேற்றப்பட்ட ஒரு எம்.பி. எனக்கு உபதேசம் செய்கிறார். அவர்தான் மிகப்பெரிய பெண் விரோதி. தனது எதிர்காலத்தை எவ்வாறு பாதுகாப்பது மற்றும் எப்படி பணம் சம்பாதிப்பது என்பது மட்டுமே அவருக்குத் தெரியும்.” என்று விமர்சித்துள்ளார்

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x