Published : 29 Jun 2025 06:46 AM
Last Updated : 29 Jun 2025 06:46 AM
புதுடெல்லி: உத்தர பிரதேச மாநிலத்தில் 15 ஆண்டுகளாக கதாகாலட்சேபம் செய்யும் முகுட்மணி சிங் யாதவ் மற்றும் அவரது உதவியாளர் சந்த் குமார் யாதவ் தாக்கப்பட்டனர். முகுட்மணியின் தலைமுடியை மொட்டையடித்த கும்பலில் 4 இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிராமணர் அல்லாத முகுட்மணி கதாகாலட்சேபம் செய்யக் கூடாது என்று எதிர்ப்பு தெரிவித்து தாக்குதல் நடந்துள்ளது. இதை சமாஜ்வாதி தலைவர் அகிலேஷ் யாதவ் உட்பட பலரும் கண்டித்துள்ளனர். இதற்கிடையில், முகுட்மணி மீது பாலியல் மற்றும் பிராமணர் என பொய் கூறியதாக வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. இதுகுறித்து உ.பி.யின் மற்றொரு பிரபல கதாகாலட்சேபகர் லவ்லி சாஸ்திரி வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: முகுட்மணி மீது நடத்தப்பட்ட தாக்குதல் யாதவ சமூகத்தினர் அனைவருக்கும் அவமானம். யாதவர்களில் கதாகாலட்சேபகர்கள் அதிகமாகிவிட்டதால், பிராமணர்களுக்கு கோபம் வருகிறது. யாதவர்களால் வாழ்நாள் முழுவதும் வணங்கப்பட்டவர்கள் இப்போது அவர்களைத் தாக்குகிறார்கள்.
வீடு கட்ட பூசை, திருமண சடங்குகள் என அனைத்துக்குமே பிராமணர்களை அழைக்கிறோம். யாதவர்களால் தம் சமூக மக்களின் திருமணங்கள், மத சடங்குகளை தானே நடத்த முடியாதது ஏன்? யாதவர்கள் இப்போதே ஒன்றுபட வேண்டும். இவ்வாறு லவ்லி சாஸ்திரி கூறியுள்ளார். இந்நிலையில், முகுட்மணியை சமாஜ்வாதி கட்சி தலைமை அலுவலகத்துக்கு அழைத்து சால்வை போர்த்தி மரியாதை செய்துள்ளார் அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ். அகிலேஷ் கூறுகையில், ‘‘சமூக ஆக்கிரமிப்பாளர்கள் இதர சமூகத்தின் கலைஞர்களையும் விட்டுவைப்பதில்லை. உ.பி.யில் 90 சதவிகித சமூகத்தினர் கொண்ட தலைநகரம் ஒரு சதவிகிதத்தினரிடம் சென்றது எப்படி?’’ என்று தெரிவித்துள்ளார்.
பாஜக தலைமையில் ஆளும் கூட்டணி உறுப்பினரும் உ.பி. கேபினட் அமைச்சருமான ஓம் பிரகாஷ் ராஜ்பர் கூறுகையில், ‘‘நடந்த சம்பவத்தை நாமும் கண்டிக்கிறோம். முகுட்மணி 2 ஆதார் அட்டைகளை வைத்து பிராமணர் என ஏமாற்றினார். பிராமணர்கள், சத்திரியர்கள், யாதவர்கள், விஸ்வகர்மாவினர் என அவரவருக்கென பணிகள் உள்ளன. இந்த சூழ்நிலையில் மற்ற சமூகங்களின் பணிகளை அபகரிப்பது தொடங்கி விட்டது. பிறப்பில் இருந்து இறப்புக்கு பின்பும் காரியங்கள் செய்து வரும் பிராமணர்களின் பணிகளை அபகரித்தால் தகராறு வரத்தான் செய்யும். முதலில் அகிலேஷ் தன் குடும்பத்தின் சடங்குகளுக்கு பிராமணர்களை அழைப்பதை நிறுத்துகிறாரா பார்க்கலாம்’’ என்று தெரிவித்தார்.
இதற்கிடையில், முகுட்மணி மீதான வழக்கை எட்டாவாஎஸ்எஸ்பி பிரஜேஷ் வஸ்தவாவிடம் இருந்து ஜான்சி போலீஸாரிடம் ஒப்படைக்க முதல்வர் ஆதித்யநாத் உத்தரவிட்டுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT