Published : 29 Jun 2025 06:39 AM
Last Updated : 29 Jun 2025 06:39 AM
டிஜிட்டல் அரெஸ்ட் பெயரில் மும்பையை சேர்ந்த பெண் மருத்துவரிடம் இருந்து ரூ.3 கோடியை மர்ம கும்பல் அபகரித்துள்ளது.
மகாராஷ்டிர தலைநகர் மும்பையை சேர்ந்த 70 வயது பெண் மருத்துவருக்கு கடந்த மே 28-ம் தேதி செல்போனில் அழைப்பு வந்தது. அதில் பேசிய நபர், தன்னை அமித் குமார் என்றும் தொலைத் தொடர்பு துறை மூத்த அதிகாரி என்றும் அறிமுகப்படுத்தி கொண்டார்.
பெண் மருத்துவரின் சிம் கார்டு, ஆதார் எண்ணை பயன்படுத்தி பல கோடி ரூபாய் மோசடி நடைபெற்று இருப்பதாக மர்ம நபர் மிரட்டினார். இதைத் தொடர்ந்து வாட்ஸ் அப் வீடியோ காலில் மற்றொரு மர்ம நபர், பெண் மருத்துவரை தொடர்பு கொண்டார். அந்த மர்ம நபர், தன்னை மும்பை காவல் துறையின் குற்றப்பிரிவு மூத்த ஐபிஎஸ் அதிகாரி சமதன் பவார் என்று அறிமுகம் செய்து கொண்டார். அவர் போலீஸ் உடையில் இருந்ததாலும் மிரட்டும் தொனியில் பேசியதாலும் பெண் மருத்துவர் மிகுந்த அச்சமடைந்தார்.
"ஜெட் ஏர்வேஸ் நிறுவனர் நரேஷ் கோயல் ரூ.538 கோடி மோசடி வழக்கில் சிக்கி உள்ளார். இந்த மோசடியில் உங்களது செல்போன் சிம் கார்டு, ஆதார் எண் பயன்படுத்தப்பட்டு இருக்கிறது. எனவே உங்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்கிறோம். இந்த வழக்கில் குறைந்தபட்சம் 3 ஆண்டுகள் வரை சிறை தண்டனை விதிக்கப்படும்" என்று மர்ம நபர் மிரட்டினார்.
கைது நடவடிக்கையில் இருந்து தப்பிக்க மர்ம நபர் கூறிய வங்கிக் கணக்குகளுக்கு பெண் மருத்துவர் பல்வேறு தவணைகளில் ரூ.3 கோடியை அனுப்பினார். இதுகுறித்து குடும்பத்தினருக்கு தகவல் தெரியவந்தது. உடனடியாக அவர்கள் மும்பை காவல் துறையில் புகார் அளித்தனர். இதுகுறித்து மும்பை சைபர் குற்றப் பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
மோசடி குறித்து மும்பை போலீஸார் கூறும்போது, “பெண் மருத்துவரை நம்ப வைக்க உயர் நீதிமன்றம், அமலாக்கத் துறை, சிபிஐ, ரிசர்வ் வங்கியின் பெயரில் போலி ஆவணங்களை வாட்ஸ் அப்பில் அனுப்பி உள்ளனர். சுமார் ஒரு வாரமாக பெண் மருத்துவரை மிரட்டி ரூ.3 கோடி வரை அபகரித்து உள்ளனர். டிஜிட்டல் அரெஸ்ட் குறித்து மத்திய, மாநில அரசுகள் தரப்பில் பல்வேறு விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆனாலும் மோசடி கும்பல்களிடம் மக்கள் ஏமாறுகின்றனர்" என்று தெரிவித்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT